நீதிபதி சொன்ன “அந்த” வார்த்தை.. கேஸ் போட்டவருக்கே தண்டனை! மாட்டிக்கொண்ட இறால் பண்ணை உரிமையாளர்
சென்னை: சட்ட விரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக ஆறு வாரங்களில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கியும் சட்டவிரோத இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சட்ட விதிகளுக்கு முரணாக, உரிய அனுமதியை பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி, மீன்வளத்துறை உதவி இயக்குனர், கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். மத்திய அரசின் கடலோர மீன் வளர்ப்பு ஆணைய சட்டப்படி, கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

ஆனால், மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உரிய அனுமதிகளைப் பெறாமல் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் அந்த பண்ணைகளை மூட உத்தரவிட்டதாகவும் அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் குமரேசன் ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 709 இறால் பண்ணைகள் உள்ளது எனவும், அவற்றில் 2 ஆயிரத்து 227 பண்ணைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டவை எனவும் அவர் கூறினார்.
348 பண்ணைகளின் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதனை யடுத்து, அனுமதி இல்லாமல் செயல்பட்ட மனுதாரர்களின் இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல சட்ட விரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக ஆறு வாரங்களில் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications