சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் சிக்கல்.. ‘அயலான்’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தையும், வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பல்வேறு காரணங்களால் 'அயலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட பணிகள் தாமதமானது. இதனையடுத்து பணிகள் முடிவடைந்து, இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அயலான்' திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அயலான் திரைப்படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வைபவ் நடித்துள்ள ஆலம்பனா திரைப்படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலம்பனா திரைப்படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐகோர்ட், ரிலீஸுக்கு தடை விதித்துள்ளது.
இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம், தங்களுக்குத் தரவேண்டிய 14.70 கோடி ரூபாய் கடன் நிலுவைத் தொகையைத் தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படம் தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு 'அயலான்' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஐகோர்ட் தடையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications