சட்டம் ஒழுங்கு பிரிவில் 'கரப்ஷனுக்கு' இடமிருக்க கூடாது! தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை: நேர்மை, ஒழுக்கம், கண்ணியமிக்கவர்களை மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலங்களாக காவல்துறையில் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறைந்து வருவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுதப்படைகளை சேர்ந்த காவலர்கள் தங்களை மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில் நீதிமன்றம் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்
கடந்த சில நாட்களாக காவல்துறையின் மீது தனது பார்வையை உயர்நீதிமன்றம் விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக ஆர்டலி முறை ஒழிப்பு தொடர்பான வழக்கில் முதலில் காவல்துறை நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இதன் பின்னர் டிஜிபி எடுத்த முயற்சிகளை பாராட்டியது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரிவில் குற்றங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து டிஜிபிக்கும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றம்
காவல்துறையின் ஆயுதப்படைப்பிரிவில் உதவி காவல் ஆய்வாளர்கள் நால்வர் தங்களை மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில், மனுவை தாக்கல் செய்தவர்கள் 40 வயதிற்கு மேல் இருப்பதையும், அவர்கள் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டுள்ளதையும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அடிக்கோடிட்டு காட்டினர். இதனைத் தொடர்ந்து மனுதாரர்களின் கோரிக்கையையும் தள்ளுபடி செய்தார்.

உயரதிகாரிகளின் பொறுப்பு
இந்த விசாரணையின் போது தமிழக டிஜிபிக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் நீதிபதி வழங்கியுள்ளார். அதாவது, "சமூகத்துடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு நேர்மை, ஒழுக்கம், கண்ணியம் மிகவும் முக்கியம். இந்த பிரிவில் பணியாற்றும் காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணமுள்ளன. எனவே சட்டம்-ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது உயரதிகாரிகளின் பொறுப்பு" என்று கூறியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு
மேலும், "சமீப காலங்களாக குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குற்ற தடுப்பு நடவடிக்கை குறைந்துள்ளதை இது காட்டுகிறது. எனவ, நேர்மை, ஒழுக்கம், கண்ணியமிக்கவர்களை மட்டுமே சட்டம்-ஒழுங்கு பிரிவில் நியமிக்கப்பட வேண்டும்" என தமிழ்நாடு டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். இது காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறுவுத்தலைத் தொடர்ந்து காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடரப்படலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications