ED-க்கு நெருக்கடி.. ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் அனுப்பிய ஐகோர்ட்
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், அதனை மீறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் தொடர்புடைய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. முக்கியமாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர்கள் விக்ரம், ரவீந்திரன் உள்ளிட்டோர் இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம், ரவீந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆகாஷ் பாஸ்கரன், டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து பராசக்தி, பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட 3 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அவர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
ஆனால் அமலாக்கத்துறையினர் ஆவணங்களை திருப்பி ஒப்படைக்காமல் ஆகாஷ் பாஸ்கரனுக்கு ஆவணங்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை மேல் முறையீட்டு அதிகாரி மூலம் சம்மன் சென்றதாக புகார் எழுந்தது.
நீதிமன்ற உத்தரவை மீறி நோட்டீஸ் அனுப்பியதாக கூறி ஆகாஸ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை மேல் முறையீட்டு ஆணைய தலைவர் பிரதீப் குமார், நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோர் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனின் தொடர்பு குறித்து அமலாக்கத்துறை ஆதாரங்களைத் தாக்கல் செய்யுமாறு முந்தைய விசாரணையில் நீதிமன்றம் கோரியது. ஆனால் பறிமுதல் பொருட்களை திரும்ப வழங்காததால், அவமதிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே, அமலாக்கத்துறையின் பதில் மனு தாமதத்திற்காக உயர்நீதிமன்றம் ரூ.30,000 அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications