சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசு திட்டங்களை தொடரலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு கையகப்படுத்திய சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேகரிப்பு குளங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுமார் 160 ஏக்கர் சென்னை கிண்டியில் ரேஸ் கிளப் இடத்தை குத்தகைக்கு வழங்கியதில் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை சட்டப்படி வெளியேற்றி, நிலத்தை அரசு சுவாதீனம் எடுக்கலாம். அந்த நிலத்தை மக்களின் பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Chennai tn government high court

இதையடுத்து, குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக் கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமைவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி சார்பில் மழை நீரை சேமிக்க நான்கு குளங்கள் என மழைநீர் சேகரிப்பு திட்டமும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்த்தும், நிலத்தை அரசு சுவாதீனம் செய்ததை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, ரேஸ் கிளப் இடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட போது எப்படி இருந்ததோ? அதே நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் முகமது ஷபிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஏற்கனவே இந்த வழக்கில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்து உத்தரவு பிறப்பித்ததால் இந்த வழக்கை அவர் விசாரிக்கக் கூடாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ஏற்கனவே விசாரித்த வழக்கு வேறு வகையான வழக்கு என்றும், இந்த வழக்கு வேறு என்றும், தொடர்ந்து இதே அமர்வு விசாரிக்கலாம் என்றும், நிலத்தின் தற்போதைய மதிப்பு 6,500 கோடி ரூபாய் எனவும், வாடகை பாக்கி 1,200 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை நீக்க வேண்டும் என்றும் பொது நலன் கருதியே திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதனை தொடர அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் கருதி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அவசியம் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+