கள்ளக்குறிச்சி வழக்கு.. என்ன இது? ஆக்சன் எடுங்க! ஊடகங்கள், வழக்கறிஞர்களுக்கு எதிராக ஹைகோர்ட் அதிரடி
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் விரைவாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சதிஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அறிக்கைகளை தாக்கல் செய்தார்.

மருத்துவ குழுக்கள்
பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட உயர்நீதிமன்றம் அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது.

ஊடக நேர்காணல்
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் படி, இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுவதாக கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள்
மேலும், ஜிப்மர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கறிஞராக இருந்து இதுபோல் தனியாக விசாரணை நடத்துவது தொழிலுக்கு ஏற்றது அல்ல என்றார்.

பார் கவுன்சிலுக்கு உத்தரவு
மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் பேசிய வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

அரசுக்கு பாராட்டு
புகார்தாரர்களே குற்றம்சாட்டப்பட்டவராக மாறிய சம்பவங்களையும் இந்த நீதிமன்றம் தன்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறது என்று அவர் கூறினார். மாணவியின் மரணத்திற்கு காரணமான எதையும் அரசு விட்டுவைக்காமல் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று பாராட்டிய நீதிபதி விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications