பிறழ் சாட்சி.. சென்னை தொழிலதிபர் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்!
சென்னை: தனது மகளுடன் பாலியல் உறவில் இருந்ததாக பரவிய தகவலால், தனது கார் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் அவரது மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் பிரதீக் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு கூடுதல் அமர்வு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்த நிலையில், அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியின் மகளுடன் அவரது கார் ஓட்டுநர் பாபு திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக மற்றொரு ஓட்டுநர் கிருஷ்ண மூர்த்தியிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு பாபு கடத்தப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் வைத்து ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் பிரதீக் ஆகியோர் கூலிப்படை உதவியுடன் பாபுவின் ஆணுறுப்பை துண்டித்து கொடூரமாக கொலை செய்ததாக போலீசார், கிருஷ்ண மூர்த்தி, பிரதீக் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இருந்தது தீபா என்பதும், பிறகு விசாரணையின்போது அவர் பிறழ் சாட்சியாக மாறியபோதும் அவர் அளித்த வாக்குமூலமே, கொலையாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தந்ததும் குறிப்பிடத்தக்கது.
2010ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பாபு காணாமல் போனார்ர். இதில், தனது தந்தை மற்றும் சகோதரன் மீதுதான் சந்தேகம் இருப்பதாக பாபுவின் பெற்றோரிடம் தீபா கூறுகிறார். தொடர்ந்து காவல் நிலையத்தில் பாபு காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, கொடைக்கானலில் பாபுவின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணமூர்த்தியும் பிரதீக்கும் கைது செய்யப்பட்டனர். முதலில் வாக்குமூலம் அளித்த தீபா, விசாரணையின்போது போலீசார் மிரட்டித்தான் தந்தை மற்றும் சகோதருக்கு எதிராக சாட்சியம் அளித்ததாகக் கூறினார்.
ஆனால், இதனை நீதிபதி ஏற்கவில்லை. குற்றவாளிகள் என தீர்ப்பளிக்க மற்றொரு காரணமாக, சாட்சியங்கள் முன்னிலையில், பிரதீக் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றவாளிகள், இரண்டு கார்களில், பாபுவின் உடலை எடுத்துக்கொண்டு கொடைக்கானல் சென்றபோது அவர்கள் காருக்கு பெட்ரோல் போட்ட ரசீது மற்றும் சுங்கச் சாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகள் குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சியங்களாக அமைந்தன.
இந்த வழக்கு, அரசு தரப்பில், முக்கிய சாட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றத்தை நிரூபிக்காமல், 'சூழ்நிலை ஆதாரங்களின்' அடிப்படையில் கொலைக் குற்றச்சாட்டுகளை நிரூபித்த வழக்குகளுக்கு முன்னுதாரணமாக மாறியது.
தீர்ப்பளித்த நீதிபதி, அரசுத் தரப்பில் அளித்த சாட்சிகள், ஆவணங்கள், ஆறு பேரும் இணைந்து குற்றச்செயலில் ஈடுபட்டதை நிரூபிக்கிறது, கொலை செய்ததன் தொடர் சங்கிலி நிகழ்வுகள் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த சங்கிலி எங்கும் உடைபடவில்லை, ஒவ்வொரு குற்றவாளியின் தொடர்பையும் அரசு தரப்பு சாட்சிகள் மூலம் நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
2024 ஆம் ஆண்டு இந்த வழக்கில் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சாட்சியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் தீபா, விசாரணை நீதிமன்றத்தில் பிறழ் சாட்சி அளித்துள்ளார். அவர் பாபு உடன் உறவில் இருந்தது நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications