ரோட் ஷோவுக்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.. ஒவ்வொரு விதிக்கும் ஒரு வழக்கு! நீதிமன்றம் கருத்து
சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ-க்களுக்கு தமிழக அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் ஒவ்வொன்றையும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் சோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தங்கள் கட்சிகள் சார்பில் ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் முன் தங்கள் கட்சியினரை அரசு கலந்தாலோசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண், மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் தனி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் கூட்டங்களுக்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்கும் போது அதற்கு உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆட்சேபனைகளை தெரிவித்தார்.
த.வெ.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், அனுமதிக்கப்பட்ட இடங்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அந்த இடங்களில் எத்தனை பேர் நிற்கலாம்? எத்தனை பேர் அமரலாம் என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பார்க்கும் போது, ரோட்ஷோக்களுக்கு அனுமதி பெறுவது என்பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல் உள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? ஏற்கப்பட்டதா? என முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவும் எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது எனக் கூறி விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
