குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜய்யின் தவெக பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, "வீட்டில் இருக்கும் குட்டி நண்பா நண்பீஸ்.. விஜய் மாமாவுக்கு ஓட்டு போட சொல்லுங்கள்" என்று விஜய் பேசியிருந்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெற்றோர்கள், அண்ணன், அக்காவிடம் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு குழந்தைகளிடம் வற்புறுத்தினார். இது தேர்தல் நடத்தை விதி மீறல்.

தேர்தல் நடத்தை விதிமீறல்
இதேபோன்று தேர்தல் பிரசாரத்தின் போது பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வெறும் செய்தியின் அடிப்படையில் தான் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும். இந்த தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திமுக மற்றும் அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "குழந்தைகளை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. ஊழல் நடவடிக்கைகளை பொறுத்தவரை வெற்றி பெற்ற வேட்பாளர்களை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்" என குறிப்பிட்டனர். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "எங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க கூடுதல் கால அவகாசம் தேவை" என பேசினர்.
இதற்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், "திமுக, அதிமுக, தவெக இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
விஜய் பேசியது என்ன?
அதாவது சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள் அன்று, சென்னையில் பேசிய விஜய், "வீட்டில் இருக்கும் குட்டி நண்பா, நண்பீஸ்.. விஜய் மாமாவுக்கு ஓட்டு போட சொல்லுங்கள்.. பெற்றோரையும் ஓட்டு போடும் வயசில் இருக்கும் அண்ணா, அக்கா, சித்தி, சித்தப்பா எல்லோரையும் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லுங்க" என்று பேசினார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. விஜய் தன் அரசியலுக்காக குழந்தைகளை பயன்படுத்துவதா? என தொடர்ச்சியாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications