அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் காலமானார்.. சென்னை மருத்துவமனையில் உயிர் பிரிந்த சோகம்
சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியின் சகோதரரும், டாக்டருமான தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலையில் அவரது உயிர் பிரிந்தது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருப்பவர் பொன்முடி. இவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இவரது சகோதரர் பெயர் தியாகராஜன். டாக்டரான இவர் சிறுநீரக சிறப்பு நிபுணராக இருந்தார். இந்நிலையில் தான் தியாகராஜனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பொன்முடியின் சகோதரர் இறப்பு
இதையடுத்து தியாகராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தான் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்துள்ளது. இன்று அதிகாலையில் தியாகராஜன், மருத்துவமனையில் உயிரிழந்தார். அதிகாலை 3 மணியளவில் அவர் இயற்கை எய்தியுள்ளார்

உடல் அஞ்சலி
இதையடுத்து அவரது உடல் விழுப்புரத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் தியாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகு இன்று மாலையில் வீட்டில் இருந்து தியாகராஜனின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. மறைந்த தியாகராஜனுக்கு மனைவி பத்மினி, மகன்கள் திலீபன், சிட்டிபாபு ஆகியோர் உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்நிலையில் தான் அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் மறைவுக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், ‛‛உயர்கல்விதுறை அமைச்சர் க பொன்முடி அவர்களின் சகோதரர் மருத்துவர் க.தியாகராஜன் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்'' என்றார்.

ராமதாஸ் இரங்கல்
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மருத்துவர் தியாகராஜன் சிறந்த மருத்துவர். பழகுவதற்கு நல்ல மனிதர். பணத்தை பெரிதாக மதிக்காமல் மருத்துவத்தை சேவையாக செய்து வந்தவர். மருத்துவர் தியாகராஜனை இழந்து வாடும் அமைச்சர் பொன்முடி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என வருத்தத்துடன் கூறியுள்ளார். இதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பிற கட்சி தலைவர்கள் தியாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications