சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோவில் கைது
சென்னை: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உதவியதாக சிறுமியின் அத்தையையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள கோடம்பாக்கம் ஸ்ரீயை வரும் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய இந்து மகா சபா தலைவராக கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர் உள்ளார். கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீகண்டன் ஆன்மீகம் தொடர்பாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில், கோடம்பாக்கம் ஸ்ரீயை தி.நகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதரவற்ற சிறுமி ஒருவர், அவரது அத்தை வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார். அப்போது, அந்த சிறுமிக்கு துணி எடுத்து தருவதாக கூறி, ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலுக்கு வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
4 ஆண்டுகள் கழித்து நடவடிக்கை
இதன் அடிப்படையில், ஈசிஆரில் இருக்கக்கூடிய இந்து மகா சபை அமைப்பின் தலைவர் ஸ்ரீ என்பவர் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் கழித்து சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் கோடம்பாக்கம் போலீசார், அகில இந்திய இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ மற்றும் சிறுமியின் அத்தை ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் அத்தையும் கைது
கோடம்பாக்கம் ஸ்ரீ மீது 5, 6 என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் அத்தை செல்போனை பறிமுதல் செய்துள்ள போலீசார் அதையும் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமியின் வீடியோவை அவரது அத்தை செல்போனில் எடுத்து அதை வைத்து மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், அந்த செல்போனில் ஏதேனும் வீடியோ இருக்கிறதா என ஆய்வு செய்ய, போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். கைது செய்யப்பட்ட கோடம்பாக்கம் ஸ்ரீ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications