கண்ணன் கடவுளா? ஐயப்பனை கடவுள் என்றால் அறிவுக்கு பொருந்துமா? மதுரை பேரணி முழக்கத்தால் புது சர்ச்சை
சென்னை: மதுரையில் நேற்று நடைபெற்ற செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களுக்கு எதிராக பெரியாரிஸ்டுகள் முழக்கம் எழுப்பியதற்கு சமூக வலைதளங்களில் இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சர்ச்சை வெடித்துள்ளது.
Recommended Video
இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்கள், கட்சிகள் இணைந்து மதுரையில் செஞ்சட்டை பேரணியை நேற்று நடத்தினர். இதற்கு முன்னதாக திருச்சியில் கருஞ்சட்டை, கோவையில் நீலச்சட்டை பேரணி ஆகியவை நடத்தப்பட்டன. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இந்த பேரணியை நடத்தினர்.
|
செஞ்சட்டை பேரணியில் தலைவர்கள்
மதுரை காளவாசலில் செஞ்சட்டை பேரணி தொடங்கியது. மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடதுசாரி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, மதுரை எம்.பி.சு. வெங்கடேசன், பெரியாரிஸ்டுகள் கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலை கழகம்), கோவை ராமகிருட்டிணன் (தந்தை பெரியார் தி.க.) உள்ளிட்ட பல கட்சி, இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

திருமாவளவன் எச்சரிக்கை
இக்கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் ஆகியவை பார்பனியத்தையும் முதாலாளித்துவத்தையும் எதிர்க்க கற்றுக் கொடுத்தவை. நாம் ஆதிக்கத்தை அடி மரத்துடன் வெட்டி விட வேண்டும். நாம் மேல் கட்டுமானத்தை வெட்டுவது முக்கியமல்ல என்றார். மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோர் பிராமணர்கள் அல்ல. ஆனால் பிராமணர்களுக்காக வேலை பார்ப்பார்கள் என்றும் சுட்டிக் காட்டினார் திருமாவளவன்.

ஜி.ராமகிருஷ்ணன்
இந்த மாநாட்டில் பேசிய மூத்த இடதுசாரித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, கார்ப்பரேட் அரசாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் க்கு அதானி உதவி செய்கிறார். அதானிக்கு ஆர்.எஸ்.எஸ். உதவி செய்கிறது என்றார்.

கடவுள் எதிர்ப்பு முழக்கங்கள்
முன்னதாக நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணியில் பெரியார், அம்ப்தேகர், மார்க்ஸ் உள்ளிட்டோர் பதாகைகளுடன் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திராவிடர் விடுதலை கழகத்தின் நாமக்கல் மாவட்டத்தினர் பேரணியில், ஆடு, பன்றி பலி கேட்கும் மாரி ஒரு கடவுளா?
பெண்களை கற்பழித்த கண்ணன் ஒரு கடவுளா? ஆணும் ஆணும் உறவுகள் கொண்டால் பிள்ளைகள் பிறக்குமா? ஐயப்பனை கடவுள் என்றால் அறிவுக்கு அது பொருந்துமா? என்கிற முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளன. இத்தகைய முழக்கங்களுக்கு இந்துத்துவா அமைப்பினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருவதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications