விமானத்தில் ஒலித்த தமிழ் குரல்! பண்டைய தமிழர்கள் பெருமை சொல்ல சொல்ல.. மெய்சிலிர்த்த ஹிப் ஹாப் தமிழா
சென்னை: தனது சமீபத்திய விமான பயணத்தில் தமிழில் வந்த அறிவிப்பு குறித்த சில நெகிழ்ச்சி கருத்துகளை ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக விமானத்தில் பயணிக்கும் போது குறிப்பிட்ட பயணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை விமானத்தின் பைலட்கள் அறிவிப்பார்கள். பாதுகாப்பு சார்ந்த அறிவிப்புகள், எங்கே செல்கிறோம் என்பது குறித்து தகவல்களையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வார்கள்.

பெரும்பாலும் இந்த அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் இருக்கும். தமிழ்நாட்டிற்குள் உள்ள இரு நகரங்களை இணைக்கும் விமானம் என்றாலும் கூட இந்த அறிவிப்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் இருக்கும். இதை விமானத்தில் பயணித்த அனைவரும் கேட்டிருப்போம்.
தமிழில் அறிவிப்புகள்: தமிழக நகரங்களை இணைக்கும் விமானத்தில் கூடவா தமிழில் அறிவிப்பு இல்லை என்று பலருக்கும் தோன்றியிருக்கும். அவ்வளவு ஏன் தமிழகத்தில் இயங்கும் விமானங்களில் இருக்கும் பணிப்பெண்களுக்குக் கூட பெரும்பாலும் தமிழ் தெரிந்திருக்காது. விமானத்தில் பெரும்பாலும் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இருப்பதால், அவர்களுக்கும் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே தெரிந்து இருக்கும். இது தொடர்பாக ஏற்கனவே திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ் தெரிந்தோரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இருப்பினும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குத் தமிழ் தெரிந்தோர் இல்லாததே இதற்குக் காரணம் என்பது விமான நிறுவனங்கள் அளிக்கும் விளக்கமாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க விமானத்தில் நீங்கள் பயணிக்கும் போது திடீரென அழகிய தமிழில் பைலட்டிடம் இருந்து அறிவிப்பு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதுவும் கல்லணை, கொள்ளிடம் என பண்டை தமிழர்களின் சாதனைகள் தெரிந்த ஒருவரிடம் இருந்து அறிவிப்பு வந்தால் எப்படி இருக்கும்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி: அப்படியொரு சம்பவம் குறித்த தகவல்களைத் தான் ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டா கிராமில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் 2 கே கிட்ஸ் மத்தியில் அதிகம் டிரெண்டிங்கில் இருப்பவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. முதலில் இன்டிபெண்டன்ட் பாடல்கள் மூலம் அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா அதன் பிறகு விஷாலின் ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களிலும் கூட ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் தனது சமீபத்திய விமான பயணத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ""சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் " என குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், அட தமிழ்ல Announce பண்றாங்களேப்பா என ஒரு சின்ன சந்தோஷம்.
பெரும் வியப்பு: "வலப்புறம் 2000 ஆண்டுகள் பழைய பொறியியல் அதிசயமான சோழன் கட்டிய கல்லணையைக் காணலாம். இடப்புறம் கொள்ளிடத்தைக் காணலாம்" என ஒவ்வொரு அறிவிப்பிலும் பெருமையோடு தமிழில் அறிவித்த அந்தக் குரலின் சொந்தக்காரனை காணவேண்டும் என ஆசை. சாந்தமான முகத்தோடு வந்த பைலட் பிரியன் விக்னேஷிடம் "அருமை நண்பா" என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.
இதில் சிறப்பு என்னவெனில், பிரியன் ஆங்கிலத்தில் அறிவிக்கும்போது அவர் சொல்லச் சொல்ல, இரண்டு வெளிநாட்டு பயணிகள் எட்டி ஆச்சரியத்தோடு கல்லணையை பார்க்க ஜன்னல் அருகே முண்டியடித்தனர். இவர் முயற்சிக்கு ஒரு சக தமிழனாக ஒரு சிறிய Shoutout!" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications