ஹேப்பி நியூஸ்.. சரிந்து வரும் கொரோனா தொற்று.. காலியாகும் மருத்துவமனை வார்டுகள்!
சென்னை: கொரோனா தொற்றுக் குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் வார்டுகள் காலியாகி வருவது மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சை ஏற்படுத்துவதாக உள்ளது.
Recommended Video
கொரோனா 2வது அலையின் வீரியம் வேகமாக குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையிலும், சுற்றுப் பகுதிகளிலும் வேகம் குறைந்து வருகிறது.
கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வருவதால் சென்னையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் வார்டுகள் காலியாகி வருகின்றது.

கொரோனா 2வது அலை
கொரோனா தொற்று 2வது அலை காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தது. தமிழகத்திலேயே கொரோனா பரவலில் உச்ச நிலையில் சென்னை இருந்தபோது, ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசலில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்சுகள் காத்திருந்தன. படுக்கைகள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டது.

படுக்கைகள் இல்லை
படுக்கைகள் கிடைக்காத நிலையில், ஆம்புலன்சுக்குள்ளேயே சிகிச்சை நடப்பதும், சிலர் ஆம்புலன்சில் மரணமடைந்ததையும் பார்த்தோம். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

வார்டுகள் காலி
இதன் காரணமாக சென்னையில் கடந்த வாரமே மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக தொடங்கியது.
சென்னையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 2,500-ஐ கடந்திருந்தது . ஆனால், பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இருப்பினும் இறப்பு விகிதம் குறையவில்லை.

முன்களப் பணியாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அரசு மருத்துவமனை படுக்கைகள் காலியாகிறது, மருத்துவ பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது முடக்கம் மற்றும் தேர்வுகளை மக்கள் உணர்ந்து பின்பற்றுவதன் மூலமாகவும் , தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாலும் கொரோனா பாதிப்பு மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்றே நிம்மதி
படுக்கைகள் காலியாகி வருவதாலும், தொற்றுப் பரவல் மட்டுப்பட்டு வருவதாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் என அனைத்து முன்களப் பணியாளர்களும் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். இதேபோல மேலும் தொற்று குறைந்து 2வது அலை சீக்கிரமே முற்றிலும் முடிந்து போக வேண்டும் என்றும் அனைவரும் விரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications