ஓசூரில் ஏர்போர்ட் நிச்சயம்.. கிரீன் சிக்னல் கிடைச்சாச்சு! அமைச்சர் டிஆர்பி ராஜா குட் நியூஸ்
சென்னை: திட்டமிட்டப்படி ஓசூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார். 150 கிலோமீட்டருக்குள் 2 விமான நிலையங்கள் அமையக்கூடாது என்ற விதியில் மத்திய அரசு மாற்றம் செய்து இருப்பதாகவும் அரசின் விதிமுறை மாற்றத்தால் ஓசூர் விமான நிலையம் கட்டாயம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தில் கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள நகரங்களில் ஒன்று ஓசூர். தொழில் நகரான ஓசூரில் புதிய விமான நிலையம் கட்ட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

ஓசூர் விமான நிலையம்
இதில் 800 ஏக்கர் அரசு நிலமும், 12 கிராமங்களுக்குச் சொந்தமான பிற நிலங்களும் அடங்கும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் இந்த பிரம்மாண்ட விமான நிலைய திட்டத்திற்கு, ஓசூர் - பெரிகை - பாகலூர் - சூளகிரி பகுதி மாநில அரசால் தேர்வு செய்யப்பட்டது.
விரிவான தொழில்நுட்ப - பொருளாதார அறிக்கை தயாரிக்க ஆலோசகரைத் தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் வெளியிட்டதுடன், இடம் ஒப்புதலுக்காக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தையும் அணுகியது. ஆனால் இதில் புதிதாக ஒரு சிக்கல் முளைத்தது.
விதியை தளர்த்திய மத்திய அரசு
அதாவது தற்போது பயன்பாட்டில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மற்றொரு விமான நிலையம் அமைக்க முடியாது என்ற விதி இருந்தது. இதனால் பெங்களூரில் இருந்து 100 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள ஓசூரில் விமான நிலையம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது, தற்போது பயன்பாட்டில் உள்ள ஏர்போர்ட் நெருக்கடியால் திணறும் நிலைக்கு வந்துவிட்டால் 150 கிலோமீட்டர் என்ற விதியை தளர்த்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இதனை உறுதி செய்தார்.
டிஆர்பி ராஜா சொன்ன விஷயம்
மத்திய அரசின் இந்த விதிமுறை தளர்வு காரணமாக இரண்டாவது விமான நிலையத்தை சம்பந்தப்பட்ட மாநிலம் அமைத்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில், "திட்டமிட்டப்படி ஓசூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும்.
150 கிலோமீட்டருக்குள் 2 விமான நிலையங்கள் அமையக்கூடாது என்ற விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் விதிமுறை மாற்றத்தால் ஓசூர் விமான நிலையம் கட்டாயம் பயன்பாட்டுக்கு வரும்" என்றார். அரசின் இந்த அறிவிப்பு ஓசூரில் விமான நிலையம் அமைவதற்கு இருந்த இடையூறுகள் விலகியுள்ளன. இது அப்பகுதியை சேர்ந்த தொழில் துறையினருக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications