மணிப்பூரில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு! குடும்பத்துடன் தப்பி வந்த தமிழர்! உதவிகேட்டு முதல்வரிடம் மனு
சென்னை: மணிப்பூரில் வீடு அடித்து நொறுக்கப்பட்டுவிட்டதாகவும், பச்சிளம் குழந்தையுடன் மிகவும் கஷ்டப்படுவதாகவும் மணிப்பூரில் இருந்து குடும்பத்துடன் தப்பி ஓடி வந்த தமிழர் உதவி கேட்டு முதல்வர் ஸ்டாலின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.

மணிப்பூர் வன்முறையில் 150 பேருக்கு மேல் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இவ்விவகாரத்தால் நாடாளுமன்றமும் முடங்கி வருகிறது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு முற்றிலும் இயல்பு வாழ்க்கை முடங்கி அப்பாவி பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அந்த வகையில், மணிப்பூரில் வசித்து வந்த தமிழர் ஒருவரும் வன்முறையால் பாதிக்கப்பட்டு தற்போது குடும்பத்துடன் தமிழகம் ஓடி வந்துள்ளார். மேலும் தனக்கு உதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் தனிப்பிரிவில் மனுவும் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜோசப் என்ற அந்த மணிப்பூர் வாழ் தமிழர் கூறியதாவது:- மணிப்பூரில் உள்ள சுகுனு என்ற இடத்தில் வசித்து வரும் மலைவாழ் தமிழனாகும்.
நான் 7, 8 வயதில் மணிப்பூர் சென்றேன். எனது பெற்றோர் அங்கேயே இறந்து விட்டனர். மணிப்பூர் மாநில பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வசித்து வருகிறேன். எனக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர். நான் மனைவி, மருமகள், பேரக்குழந்தை என மொத்தம் 9 பேர் மணிப்பூரில் வசித்து வந்தோம். அங்கு ஒரு பிளாஸ்டிக் கடை உள்ளது. மே 28 ஆம் தேதி திடீரென மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளது. எல்லோரும் கோவிலில் சென்று படுங்கள்.. என சொன்னார்கள்.
மணிப்பூர் கலவரத்தில் எங்கள் வீட்டை தீ வைத்து எரித்து, எங்களை விரட்டி அடித்து விட்டனர். எங்களின் வீடு, உடைமைகள், எல்லாவற்றையும் இழந்து போகும் இடம் தெரியாமல் தலைமறைவாக காடுகளில் இருந்தோம். பின்னர் மிசோரம் சென்று அங்கிருந்து குவாட்டிக்கு சென்றோம். இனி சென்னைக்கு வந்து விடலாம் என்று முடிவு செய்தோம். அங்கு ஒரு ராணுவ வீரர் எங்களுக்கு உதவி அளித்தார்.
அந்த பண உதவியை வைத்து சென்ட்ரல் வருகை தந்தோம். சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்த எங்களுக்கு ஒருவர் உதவ முன் வந்தார். அவரது உதவியால் நாங்கள் தற்போது செங்குன்றத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்கி இருக்கிறோம். மணிப்பூரில் நல்லபடியாக வசித்து வந்தோம். தற்போது பச்சிளம் குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். முதல்வர் எங்களுக்கு நிதி அளித்தால் அதை வைத்து பிழைத்துக் கொள்வோம்" என்றார்.












Click it and Unblock the Notifications