எனக்கு 10 ஆண்டு லைசென்ஸ் ரத்தா? விடுதலையானவுடன் புழல் சிறை வாசலில் புலம்பிய டிடிஎப் வாசன்! பரிதாபம்
சென்னை: பைக்கில் வேகமாக சென்று விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து இன்று அவர் விடுதலையான நிலையில் தனது லைசென்ஸ் 10 ஆண்டு ரத்து செய்யப்பட்டதை நினைத்து புழல் சிறை வாசலில் புலம்பினார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். பைக்கில் சாகச பயணங்கள் செய்து யூடியூப்பில் பதிவேற்றி ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ளார். இவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக பல வழக்குகள் பதிவாகின. தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே தான் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி டிடிஎப் வாசன் விலையுயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர் பைக்கில் முன்சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கினார். பைக் கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து விழுந்து நொறுங்கியது. இதில் அவர் காயமடைந்தார். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரிய நிலையில் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் மோட்டார் சைக்கிளை எரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் காட்டமாக கூறியது.
இதுமட்டுமின்றி அவரது லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இறுதியாக கடந்த 1ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து 45 நாட்களுக்கு பிறகு இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார். 45 நாள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்தார்.
அதன்பிறகு டிடிஎப் வாசனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இந்த வேளையில், ‛‛உங்களின் ரசிகர்களின் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்'' என ஒருவர் கேட்டார். அதற்கு டிடிஎப் வாசன், ‛‛ எங்கு போனாலும் ஹெல்மெட் போட்டு கொண்டு செல்ல வேண்டும். எனக்கு மிகப்பெரிய விபத்து நடந்தது. கை, முதுகில் சிறிய காயம் தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கே நான் ரொம்ப கஷ்ப்படுகிறேன். படுத்து தூங்க முடியவில்லை. ஏனென்றால் வலிக்கிறது.
யார் எங்கு சென்றாலும் பாதுகாப்பு உடை அணிந்து செல்ல வேண்டும். விபத்தின்போது நான் அணிந்திருந்த ஜாக்கெட் மற்றும் கையுறைக்கு இடையில் சிறிய இடைவெளி இருந்தது. அந்த இடத்தில் அடிப்பட்டது தான் கையில் எலும்பு முறிவு ஏற்பட காரணமாகி உள்ளது'' என்றார். இதையடுத்து, ‛‛10 ஆண்டு லைசென்ஸ் ரத்து செய்துள்ளார்களே. அதனை எதிர்த்து மேல்முறையீடு ஏதாவது செய்வீர்களா?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டிடிஎப் வாசன், ‛‛நான் பல செய்திகளை படித்துள்ளேன். லைசென்ஸை ஒரு ஆண்டு, 6 மாதம் என கேன்சல் செய்துள்ளார்கள். ஆனால் எனக்கு 10 வருடம் என்றால் எப்படி? மேலும் என்னால் யாருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது. இப்போது கூட 308 என்ற வழக்கு போட்டுள்ளனர். நானே எனது கையை உடைத்து கொண்டதாக தான் கூறியுள்ளனர். இதற்கே 45-46 நாட்கள் ஆகிவிட்டது'' என பரிதாபமாக கூறினார்.












Click it and Unblock the Notifications