நீங்கள் ஏன் மூக்கை நுழைக்கிறீங்க.. டாஸ்மாக் வழக்கு.. அமலாக்கத்துறைக்கு தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!
சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக்கில் ₹1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறை மாநில அரசின் உரிமைகளை மீறுகிறதா என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில காவல்துறையால் இந்த வழக்கை விசாரிக்க முடியாதா.. நீங்கள் ஏன் இதில் மூக்கை நுழைக்கிறீர்கள் என்றும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவது யார்.. நீங்களா மாநில காவல்துறையா என்றும் அமலாக்கத்துறையை பார்த்து கடுமையாக கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, கடந்த மே மாதம் தமிழ்நாடு டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த முறைகேடு தொடர்பான பணமோசடி விசாரணையையும் அமலாக்கத்துறை கடந்த அமர்வில் நிறுத்தி வைத்தது. அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தலைமை நீதிபதி - அமலாக்கத்துறை2025-10-14
தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரித்தது. அமலாக்கத்துறையின் விசாரணை அணுகுமுறை குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க தலைமை நீதிபதி கவாய் தயங்கினார். "கடந்த ஆறு ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்பான பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இல்லையெனில், அது மீண்டும் ஊடகங்களில் செய்தியாகிவிடும்" என்று அவர் குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) எஸ்.வி. ராஜு, மத்திய அரசுக்கு ஆதரவாக செய்திகள் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை என்று புகார் கூறினார். "எங்களுக்கு சாதகமான எந்தச் செய்தியும் அரிதாகவே பதிவாகிறது. அமலாக்கத்துறை எடுக்கும் நல்ல நடவடிக்கைகள் தெரிவது இல்லை. இதுவே எனது குறை" என்றார்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் வழக்கு வாதம்
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், டாஸ்மாக் நிர்வாகமே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், ஒரு அரசு நிறுவனத்தில் எப்படி சோதனை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
சிபல் மேலும் கூறுகையில், "நிர்வாக இயக்குநர்கள் மீது சோதனை நடத்தப்பட்டது. ஒருமுறை எஃப்ஐஆர் மற்றும் இசிஐஆர் (ECIR) பதிவு செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கை உடனடியாக முடித்துவிடலாம். இதை மாநில காவல்துறையே விசாரிக்கும். ஆனால் இங்கே அமலாக்கத்துறை கணினிகளைக் கைப்பற்றியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.
டாஸ்மாக்கில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளதாக ASG ராஜு வாதிட்டார். அவர், "47 எஃப்ஐஆர்கள் உள்ளன. பெரிய அளவிலான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. நாங்கள் அடிப்படை குற்றங்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் மீது கவனம் செலுத்துகிறோம். அனைத்து அதிகாரிகளுக்கும் பணம் எப்படிப் பாய்கிறது என்பதற்கான வழிகள் உள்ளன.. அதைத்தான் விசாரிக்கிறோம்" என்றார். சிபல் இதற்குப் பதிலளிக்கும்போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) படி அமலாக்கத்துறை மாநிலக் காவல்துறையுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.. அதனால் காவல்துறையே தொடர்ந்து விசாரிக்கக்கலாம்.. அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டியது இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
தலைமை நீதிபதி கேள்வி
தலைமை நீதிபதி கவாய், ஒரு வழக்கை விசாரிக்கும் மாநிலத்தின் உரிமையை இது மீறுவது இல்லையா? மாநிலம் விசாரிக்கவில்லை என்று உங்களுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் அங்கு செல்வீர்களா?.. போலீஸ் மீது உங்களுக்கு சந்தேகம் வந்தால் நீங்கள் உள்ளே சென்று விடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத்துறை மற்ற ஏஜென்சிகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதற்குப் பதிலளித்த ராஜு, "உண்மையில் 47 எஃப்ஐஆர்கள் உள்ளன. மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விநியோகக் கடைகளில் ஊழல் பரவலாக உள்ளது. அவர்கள் மாநிலத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது சந்தேகம்.
டாஸ்மாக் கடைகளில் MRP-யை விட அதிக கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். மேலும் அனுமதிக்கப்படாத வெளிநாட்டு மதுபானங்களையும் கூட டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் விற்கிறார்கள். இவை அனைத்திலும் லஞ்ச பணம் விளையாடுகிறது. இவை அனைத்தும் மேல் மட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து பகிர்ந்து அளிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இது தினம் தோறும் நடக்கும் நடைமுறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் அமலாக்கத்துறை நேரடியாக விசாரணை செய்கிறது" என்று குறிப்பிட்டார்.
இதை கண்டித்த நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தமிழ்நாடு அரசு தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்தீர்கள். போலீஸ் ஏற்கனவே FIR பதவி செய்துள்ளது. நீங்கள் ஏன் உள்ளே போகிறீர்கள்? டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது தமிழக அரசு வாதம் வைக்கிறது.. நீங்கள் எப்படி இந்த வழக்கில் தலையிட்டீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications