விஜய், அதிமுகவுக்கு குறுகலான சாலை.. ஸ்டாலினுக்கு மட்டும் கரூரில் அவ்வளவு பெரிய சாலை எப்படி? இன்பதுரை
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள ஆரம்பம் முதலே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. வேண்டும் என்றே மிகவும் குறுகிய சாலை ஒதுக்கப்படுவதாக தவெகவினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது அதிமுகவுக்கும், விஜய்க்கும் அனுமதி மறுத்த போலீஸார், அதே கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி என்று அதிமுக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திட்டமிட்ட நேரத்தை விட சற்று கால தாமதமாக விஜய் சென்றதாக புகார் எழுந்தது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விஜய் கூட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை என்ற அந்தக் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

கரூர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 10,000 பேர் வருவார்கள் என்று தவெகவினர் கூறியிருந்தனர். ஆனால் அதிகளவு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, சேலத்தில் இருந்து மருத்துவக் குழுவினர் கரூர் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் கதறி வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்க தொடங்கி உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் சிறிது நேரத்தில் கரூர் செல்லவுள்ளார். அமைச்சர்கள் பலரும் கரூரில் முகாமிட்டுள்ளனர். தவெக தலைவர் விஜய் இதயம் நொறுங்கிப்போய் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் ஏற்பட்டுள்ள இந்த துயர சம்பவத்துக்கு போதிய இடவசதி இல்லாமையே என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரிய திடலில் கொடுக்க வேண்டிய அனுமதியை மிகவும் குறுகிய சாலைக்கு கொடுத்துள்ளனர். இதனால், மூச்சுவிடக் கூட முடியாமல் பொதுமக்கள் துடிதுடித்து உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது அதிமுகவுக்கும், விஜய்க்கும் அனுமதி மறுத்த போலீஸார், அதே கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி என்று அதிமுக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்பதுரை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது. ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications