உங்களுக்கு என்ன தைரியம் தேஜஸ்வி சூர்யா.. இந்தியா-பாக் பிரிவினையோடு ஒப்பீடு, கொதிக்கும் தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களைப் பிரித்த விதம், ஆங்கிலேயர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பிரித்ததைப் போன்றது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா இன்று நாடாளுமனற்த்தில் கூறிய கருத்து மொத்த தெலுங்கானாவையும் கொந்தளிக்க வைத்துள்ளது. தெலுங்கானாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் ஆகிய இரு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். பலரும் உங்களுக்கு என்ன தைரியம் தேஜஸ்வி சூர்யா கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இந்தியாவின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் மகளிருக்கு இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். இதற்காக சிறப்பு நாடாமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது.

இன்று இதற்காக லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட 'எல்லை மறுவரையறை மசோதா 2026'-க்கு ஆதரவாகப் பேசிய தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸை "விஷயங்களை ஒத்திப்போடும் அரசியலை நடைமுறைப்படுத்துபவர்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
எல்லை மறுவரையறை மற்றும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக, தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி முன்மொழிந்துள்ள 'கலப்பு மாதிரி திட்டத்திற்கு எதிராக தேஜஸ்வி சூர்யா பேசினார்.
ரேவந்த் ரெட்டியின் முன்மொழிவை "மிகவும் முட்டாள்தனமான வாதம்" என்று குறிப்பிட்ட தேஜஸ்வி சூர்யா, அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்யும் 'ஒரு மனிதர், ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற கொள்கையை இது மீறுவதால், இது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் தெரிவித்தார்.
"எந்தவொரு மாநிலத்திலும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி நிலையாக இருக்காது; ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அது மாறும். உதாரணமாக, ஒரு ஆண்டில் தெலங்கானாவில் நல்ல பருவமழை பெய்து அதன் உள்நாட்டு உயர்ந்தால், அந்தத் தவணைக்கு அதற்கு அதிக இடங்கள் வழங்கப்பட வேண்டுமா? அதேபோல, ஆந்திரப் பிரதேசத்தில் வறட்சி நிலவி அதன் உள்நாட்டு உற்பத்தி குறைந்தால், அதன் இடங்கள் குறைக்கப்பட வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பிய தேஜஸ்வி சூர்யா, ரேவந்த் ரெட்டியின் வாதம் "சிரிப்புக்குரியது" என்றும் வர்ணித்தார்.
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து அட்டாக் செய்தபடி தேஜஸ்வி சூர்யா பேசிக் கொண்டிருந்த போது தான் ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரிவினை குறித்து பேசினார். அதுதான் மொத்த தெலுங்கானாவும் கொந்தளிக்க காரணமாக அமைந்துள்து. பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் பிரிவினை குறித்து, பேசும் போது, ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைச் செய்தார்களோ, அதே பாணியில் (British-style partitioning) காங்கிரஸும் ஆந்திரா-தெலுங்கானா பிரிவினையைச் செய்தது" என்று குறிப்பிட்டார்.
அதாவது, ஆங்கிலேயர்கள் நாட்டைப் பிரிக்கும்போது எப்படி மக்களிடையே பகையை வளர்த்து, அவசரகதியாகவும், அறிவியல்பூர்வமற்ற முறையிலும் பிரித்தார்களோ, அதே வேலையைத்தான் காங்கிரஸ் ஆந்திராவில் செய்தது என்பது அவர் வாதம். அவர் தெலுங்கானா மாநில உருவாக்கத்தையே 'பாகிஸ்தான்' என்று சொல்லவில்லை, மாறாக காங்கிரஸின் பிரிக்கும் முறையை பிரிட்டிஷாரின் சூழ்ச்சியுடன் ஒப்பிட்டார். இந்த பேச்சு தான் தெலுங்கானா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா உருவாக்கம் குறித்து தேஜஸ்வி மட்டுமல்ல பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் எதிர்மறையான முறையில் குறிப்பிட்டுப் பேசுவதே, அரசியல் தலைவர்களிடையே மட்டுமல்லாமல், தெலங்கானா மக்களிடையேயும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரா-தெலங்கானா பிரிவினை என்பது "மூடிய கதவுகளுக்குப் பின்னால்" செய்யப்பட்டதாகவும், காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் "குழந்தையைக் (தெலங்கானா) காப்பாற்றுவதற்காகத் தாயைக் (ஆந்திரா) கொன்றது" என்றும் பகிரங்கமாகக் கூறியிருந்தார். அச்சமயத்திலும், பிரதமரின் இந்தக் கருத்துகளுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டன.
தேஜஸ்வி சூர்யாவின் இன்றை பேச்சு பொறுப்பற்ற மோசமான பேச்சு என்று வர்ணித்த பிஆர்எஸ் எம்எல்ஏ டி. ஹரீஷ் ராவ், தெலங்கானா மாநில உருவாக்கத்தை பாகிஸ்தான் உருவாக்கத்துடன் அவர் ஒப்பிட்டது, உண்மையில் தவறானது மட்டுமல்லாமல், சுமார் நான்கு கோடி தெலங்கானா மக்களின் உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்துவதாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.
"இத்தகைய கருத்துக்கள், இந்தியாவின் அரசியலமைப்பு வரம்பிற்குள் மாநில அந்தஸ்துக்காக அயராது போராடிய மக்கள்-குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தியாகிகள்-மேற்கொண்ட பல ஆண்டு கால ஜனநாயகப் போராட்டத்தையும், அவர்கள் செய்த தியாகங்களையும் குறைத்து மதிப்பிடுகின்றன," என்று ராவ் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டார்.
தேஜஸ்வியின் கருத்தை தெலங்கானா மக்களின் கண்ணியம், அடையாளம் மற்றும் சுயமரியாதைக்கு இழைக்கப்பட்ட நேரடி அவமதிப்பு என்று குறிப்பிட்ட ஹரீஷ் ராவ், இது பாஜக தலைமையின் ஒரு பிரிவினரிடையே நிலவும் ஒரு கவலைக்குரிய மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாகக் கருதினார்; அந்த மனப்பான்மை பிராந்திய இயக்கங்களை இழிவுபடுத்தவும், அரசியல் ஆதாயத்திற்காகப் பிளவுகளை உருவாக்கவும் முயல்கிறது. தேஜஸ்வி சூர்யா மற்றும் பாஜகவிடமிருந்து உடனடியான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்; மேலும் தங்கள் நிலைப்பாடு குறித்த விளக்கத்தையும், இத்தகைய பொறுப்பற்ற அறிக்கைகள் மீண்டும் இடம்பெறாது என்பதற்கான உறுதிமொழியையும் அவர் வலியுறுத்தினார்.
தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் கூறும் போது, தெலுங்கு மாநிலங்களின் பிரிவினையை இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையுடன் ஒப்பிடுவதற்கு, தேஜஸ்வி சூர்யா போன்ற "அறிவற்ற மற்றும் முட்டாள்தனமான ஒரு நபருக்கு" என்ன உரிமை இருக்கிறது என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்.
மக்களவை சபாநாயகர் உடனடியாக சூர்யாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவரது கருத்துக்கள் மக்களவை ஆவணங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார். மேலும், தெலங்கானாவில் உள்ள பாஜக தலைமை, அவர் கூறியதைக் கண்டிக்க வேண்டும் அல்லது "முட்டாள்கள்" என்று பார்க்கப்படத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"எல்லை நிர்ணயம் தொடர்பான எங்கள் முதலமைச்சரின் 'கலப்பு மாதிரி'யை அவர் விமர்சித்திருந்தால், அதைச் செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பல போராட்டக்காரர்களின் உயிர்த்தியாகத்தின் மூலம் அடையப்பட்ட தெலங்கானா மாநில அந்தஸ்தை அவமதிப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை," என்று அமைச்சர் பொன்னம் கூறினார்.
தேஜஸ்வி சூர்யாவின் கருத்துகள் தொடர்பாக, பாஜக மத்திய அமைச்சர்களான ஜி. கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. லக்ஷ்மன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் என். ராமச்சந்தர் ராவ் ஆகியோர் எடுத்துள்ள நிலைப்பாட்டைப் பற்றியும்; 'தெலங்கானா தாயார்' இத்தகைய இழிவான முறையில் அவமதிக்கப்பட்டபோது அவர்கள் ஏன் மௌனம் சாதித்தனர் என்பது குறித்தும் கேள்வி எழுப்பிய பொன்னம், தெலங்கானா ஆர்வலர்கள், தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாஜக-விற்கு ஒரு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்தார். தேஜஸ்வி சூர்யாவை மக்களவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கக் கோரி, மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதப்போவதாகவும் பொன்னம் தெரிவித்தார்.
தெலுங்கானான முன்னாள் முதல்வர் கேடிஆரின் மகன் கவிதா கூறும் போது, "உனக்கு எவ்வளவு துணிச்சல் தேஜஸ்வி சூர்யா, எங்கள் மக்களின் பல ஆண்டு கனவை நிறைவேற்றவும், நாங்கள் எதிர்கொண்ட பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கடந்த 60 வருடங்களாக தெலங்கானாவிற்காகப் போராடிய அனைவரையும் நீ அவமதிப்பது மட்டுமல்லாமல்; தெலங்கானாவை ஒரு எதார்த்தமாக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஆயிரக்கணக்கானோரின் நினைவையும் நீ அவமதிக்கிறாய்." என்று கூறியுள்ளார்.















Click it and Unblock the Notifications