மொழிவாரி மாநிலங்கள்: அண்ணா போட்ட விதை! எதிர்த்த நேரு! மெட்ராஸ் பிரசிடென்சி பிரிந்தது எப்படி தெரியுமா
சென்னை: 'செந்தமிழ்நாடு' என பாரதி கவிதை எழுதிய காலத்தில் தமிழ்நாடு என்பது ஒடிசா வரை இருந்தது. கர்நாடகமும் ஆந்திரமும் தமிழ்நாட்டுடன் சேர்ந்தே இருந்தன. கேரளா என்ற மாநிலமே அன்று இல்லை. இந்த ஒட்டுமொத்த நிலப் பகுதியும் 'மெட்ராஸ் பிரசிடென்சி' என்று அழைக்கப்பட்டது.
'மெட்ராஸ் பிரசிடென்சி' பிரிந்தது ஏன்?
ஆங்கிலேயர் காலத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட கல்லூரிக்கு 'பிரசிடென்சி காலேஜ்' என்று பெயர் வைக்கப்பட்டது. இன்று அது 'மாநிலக் கல்லூரி' எனப் பெயர் மாறி இருக்கிறது.
'மெட்ராஸ் பிரசிடென்சி' என்பது தமிழ்நாடு என மாற்றப்பட்டுள்ளது. 'மெட்ராஸ்' என்பது சென்னையாகி இருக்கிறது. இத்தனை மாற்றங்களும் தானே நடந்துவிடவில்லை. அதற்குப் பின்னால் பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன.
'மெட்ராஸ் பிரசிடென்சியை பிரிந்து ஆந்திரா மாநிலத்தை உருவாக்கித் தாருங்கள்' என்று 1950 ஆம் தொடக்கத்திலிருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இந்தக் கோரிக்கையை மேலும் வலுவாக்க பொட்டி ஸ்ரீராமலு என்பவர் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று தனது சென்னை வீட்டில் அமர்ந்தபடி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். மொத்தம் 58 நாள்கள் இந்தப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார்.

ஆந்திராவில் வெடித்த வன்முறை
பொட்டி ஸ்ரீராமுலுவின் போராட்ட செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இறுதியில் டிசம்பர் 15 அன்று ராமலு தனது உயிரையே தியாகம் செய்தார். இதனால் ஆந்திராவில் வன்முறை வெடித்தது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் இறந்தனர்.
1952 டிசம்பர் 29 ஆம் ஆண்டில், 'ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும்' என அன்றைய பிரதமர் நேரு அறிவித்தார். பின்னர்தான் தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டு, அக்டோபர் 1, 1953 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமானது.
ஆக, பொட்டி ஸ்ரீராமலு என்ற தியாகியின் உயிரைப் பெற்றுக் கொண்டு பிறந்ததுதான் ஆந்திரா என்கின்ற குழந்தை. இதுதான் வரலாறு. ஆனால், மொழிவாரி மாநிலத்தை அவ்வளவு எளிதில் அமைக்க முடியவில்லை.

மொழிவழிப் பிரிவினையை எதிர்த்த நேரு
அரசியல் நிர்ணய சபையில் மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1948 ஜூன் 17 ஆம் நாள், அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.தார் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தார்.
ஆனால் இந்த ஆணையம், 'இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது தேவையற்றது; நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் உருவாக்கப்பட்டால்தான் புவியியல், இயற்கை வளங்கள் சார்ந்த பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். நாட்டின் ஒற்றுமையும் பாதுகாக்கப்படும்' என்று பரிந்துரை செய்தது.
தார் ஆணையத்தின் பரிந்துரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, தார் ஆணையத்தின் பரிந்துரை மற்றும் மொழிவாரி மாநில பிரிவினை பற்றி ஆராய 1948 டிசம்பரில் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகிய மூவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு ஜே.வி.பி குழு என்றும் அழைக்கப்பட்டது.

வைகோ சொல்லும் தமிழர் தாயகம்
''1949 ஏப்ரலில், இக்குழுவும் மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு எதிரான பரிந்துரையையே அளித்தது. மேலும், 'பொருளாதார மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும்' என்று ஜே.வி.பி. குழு அறிக்கை தந்தது. ஆகவே நவம்பர் 1 ஆம் தேதியைத் தமிழர் தாயகம் உருவான நாளில் உறுதி ஏற்போம்" என்கிறார் என்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இதனடிப்படையில் 1956, நவம்பர் 1 ஆம் தேதியன்று இயற்றப்பட்ட சட்டப்படி, இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன.
வைகோ, 'தாயகம் உருவான நாள்' என நவம்பர் 1 ஆம் தேதியைக் குறிப்பிட்டாலும் திமுக இந்த நாளை 'எல்லைப் போராட்ட தியாகிகள் நாள்' என்றே அனுசரித்து வருகிறது.

பிரிட்டிஷ் இந்தியா; சுதந்திர இந்தியா
"சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மாற்றம் என்பது மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதுதான். இந்தியா என்பது பல மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதைப் பலரும் இன்றும் புரிந்துகொள்ளவில்லை. 'ஸ்டேட்' என்பதை ஏதோ நிர்வாக வசதிக்கானது என நினைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு மொழிவழி மாநிலமும் ஒரு வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுள்ளது'' என்கிறார் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்.
தொடர்ந்து பேசியவர், ''அந்தந்த மொழியில்தான் நிர்வாகத்தை நடத்த முடியும் என்பதை அன்று பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே தடுத்தார்கள். அதை எதிர்த்தே 'விசால ஆந்திரா' போராட்டம் நடந்தது. 1953 ஆம் ஆண்டில் தனி ஆந்திரம் வழங்கப்பட்டது. இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் மாநில பிரிவினை.
அதற்கு முன்னால் பிரிட்டிஷ் இந்தியாவாக இருந்தபோது முதன்முதலாக ஒரிசா மாகாணம் பிரிக்கப்பட்டது. ஒடியா தேசியவாதத்தின் தந்தை மதுசூதன் தாஸின் முயற்சியால் 1936 ஆம் ஆண்டில் இது பிரிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் பம்பாயில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டது.

பிரதேஷ்; மொழிவழி மாநிலம்
இதேபோல, இந்தியாவில் முதன்முதலாக இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது ஒரிசாவில்தான். 1885 ஆம் ஆண்டில் இது நடந்தது. அந்தப் போராட்டத்தின் வழியாகவே ஒரிசா பிரிக்கப்பட்டது.
ஆந்திர பிரிவினை நடந்தவுடன் கன்னட மக்கள் சம்யுக்த கர்நாடகா கேட்டுப் போராட்டம் நடத்தினர். மராத்தி மக்கள் சம்யுக்த மகாராஷ்டிரா கேட்டுப் போராட்டம் நடத்தினர். ஐக்கிய கேரளா என்ற மாநிலத்தைக் கேட்டு மலையாள மக்கள் போராட்டம் நடத்தினர். இப்படி பஞ்சாப், குஜராத் என்று தனித்தனி மாநிலங்களைக் கேட்டு போராட்டங்கள் நடந்தன.
இந்தியா முழுமைக்கும் தனி மாநிலம் கேட்டுப் போராடியவர்கள் காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்டுகளும்தான். கூடுதலாக, தமிழ்நாட்டில் ம.பொ.சியும் மொழிவாரி மாநிலக் கருத்தை ஆதரித்தார். ஆனால் இதற்குக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நேரு எதிராக இருந்தார்.
அவரால் இந்த உரிமைப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் நிர்வாகரீதியாக 'பிரதேஷ்' ஆகப் பிரிப்பதை ஏற்றுக்கொண்டார். மொழிரீதியாகப் பிரிப்பது பாகிஸ்தானைப் போல் ஆகிவிடும் எனப் பயந்தார். அதாவது Province என்பது சரி. State என்பது தவறு என நேரு நினைத்தார்.

சட்டசபையில் திமுக வாழ்த்து
ஆனால், மொழிவாரி மாநிலம் பிரிப்பதை திமுக ஏற்றுக் கொண்டது. சட்டசபையிலேயே திமுக உறுப்பினர் ஒருவர், ஆந்திரா பிரிந்து போனதற்காக வாழ்த்துக் கூறினார். நான்கு தென்னிந்திய மாநிலங்களும் ஒருங்கிணைந்த திராவிட நாடாக இருக்கும் என்பதையும் அப்போதுதான் அறிவித்தார்கள்.

நெடுஞ்செழியனின் கடிதம்
'மொழிவாரி மாநிலம் பிரிக்கும்போது எல்லைகளை மாற்றிச் சேர்த்துவிடக்கூடாது' என நாவலர் நெடுஞ்செழியன் சில ஒழுங்குமுறைகளைக் கூறியிருந்தார். அன்றைக்கு திமுகவின் பொதுச்செயலாளர் அவர்தான்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது புதிதாகத் தோன்றிய மாநிலங்கள் உற்சாகமாக அதைக் கொண்டாடின. ஆனால் தமிழ்நாடு பெரிதாகக் கொண்டாடவில்லை. காரணம், பல பகுதிகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டதால் தமிழகம் இழப்பிலிருந்தது. ஆகவே அதை மகிழ்ச்சியான ஒன்றாகக் கருதவில்லை.

அண்ணா சொன்னது என்ன?
புதிய மாநில உருவாக்கத்தை ஏற்று அண்ணா இவ்வாறு எழுதினார்: 'இந்தப் பிரிவினையால் தமிழ் மக்கள் மட்டுமே உள்ள ஒரு பகுதி என்பது நமக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. நமக்கென்று ஒரு தாயகம் கிடைத்துள்ளது. ஆகவே, நாம் இதைக் கொண்டாட வேண்டும்' என்றார். இருந்தும் ஏனோ பெரிய விழாவாக இந்தப் பிரிவினை நாள் தமிழ்நாட்டில் உத்வேகம் பெறவில்லை'' என்கிறார்.
மேலும், ''கேரளாவில், நவம்பர் 1 ஆம் தேதியை கேரள பிறவி தினம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். கர்நாடகத்தில், 'ராஜ்யோத்ஸவம் நாள்' எனக் கொண்டாடுகிறார்கள். இப்படிப் பல மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன.

ஸ்டாலின் தந்த சட்ட உரிமை
ஆந்திரா பிரிக்கப்பட்டபோது, பிரிவினைக்கு என்று பொதுச்சட்டம் ஒன்று இந்தியாவில் இல்லை. ஆகவே, அதற்கு மட்டும் சிறப்புச் சட்டம் போட்டுப் பிரித்தார்கள். அதன்பின்னர் 1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநில பிரிவினைக்கு என்று linguistic reorganisation of states என்ற சட்டம் கொண்டு வந்து ஒட்டுமொத்தமாகப் பிரித்தனர்.
அதனால்தான், நவம்பர் 1 ஆம் தேதியைத் தமிழ்நாடு நாள் என திமுக கொண்டாடவில்லை. 'தமிழ்நாடு' என அண்ணாவால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18 ஆம் தேதியைத்தான் மாநில நாளாகக் கொண்டாடுகிறார்கள். அதையே முதலமைச்சர் ஸ்டாலின் சட்டரீதியாக உறுதிப்படுத்தியுள்ளார்" என்கிறார் ஆழி. செந்தில்நாதன்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications