48 மணி நேரம் துடித்த இளைஞர்.. 114 கிமீ வேகத்தில் போய் பலியான இளசுகள்! போனை எடுத்து பார்த்தால்.. ஷாக்
சென்னை: சென்னையில் 2 இளைஞர்கள் பைக்கில் வேகமாக சென்று பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் சில வெளியாகி உள்ளன.
தற்போது இளைஞர்கள் இடையே வாகனத்தில் வேகமாக செல்லும் மோகம் அதிகரித்து உள்ளது. பைக்கில் வேகமாக செல்வது, அதை வீடியோ எடுத்து, ஸ்பீடோ மீட்டரில் இவ்வளவு வேகத்தை தொட்டுவிட்டோம் என்று போட்டோ போடுவது இதுதான் தற்போது இளசுகள் இடையே டிரெண்டிங்.
முக்கியமாக இந்த டிரெண்டிங்கை தமிழ்நாடு அளவில் பிரபலப்படுத்தியதில் டிடிஎப் வாசன் முக்கிய பங்கு வகிக்கிறார். சமீபத்தில் யூ டியூப் பிரபலம் ஜிபி முத்துவுடன் டிடிஎப் வாசன் பைக்கில் வேகமாக சென்றார். 140 கிமீ வேகத்தை தாண்டி பைக் ஓட்டினார்.

ஜிபி முத்து
அதோடு இல்லாமல் ஜிபி முத்து இதில் ஹெல்மெட் அணியவில்லை. மேலும் வாசன் இதில் இடை இடையே கையை விட்டும் ஓட்டினார். இதை பார்த்த சிலர் வாசன் மீது போலீசில் புகார் வைத்தனர். இவர் சாலையில் நடுவில் உள்ள மிட் லைனை தாண்டி வேகமாக ஓட்டி சென்றார். இது பெரிய அளவில் சர்ச்சையானது. இதை வீடியோவாக வேறு வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், போத்தனூர் காவல்நிலையம், சூலூர் காவல்நிலையம் ஆகிய இடங்களில் இவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு, இவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வேகமாக வாகனம் ஓட்டுவதில் பல இளைஞர்களுக்கு வாசன் மோசமான ரோல் மாடலாக மாறி உள்ளார். இவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஹெல்மெட்
டிடிஎப் வாசன் போல பைக்கில் வேகமாக செல்லும் வீடியோக்களை போட ஆசைப்பட்ட 2 இளைஞர்கள்தான் சென்னையில் பலியாகி உள்ளனர். சென்னை தரமணி அருகே இருக்கும் பெரியார் நகரில் வசித்து வந்தவர் பிரவீன். இவருக்கு 19 வயதுதான் ஆகிறது. இரண்டாம் வருடம் கல்லூரியில் படிக்கிறார். இவரின் நண்பருக்கு 17 வயதுதான் ஆகிறது. அவர் பெயர் ஹரி. இவர்கள் இருவரும்தான் அடிக்கடி இப்படி பைக்கில் வேகமாக செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை தரமணி 100 அடி சாலையில் இவர்கள் வேகமாக செல்லும் போதுதான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

என்ன நடந்தது
இவர்கள் பைக்கை வேகமாக செலுத்தி, அதை வீடியோவாக போட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து 70 -- 80 -- 90 -- என்று போய் கடைசியில் 114 கிமீல் வண்டியை முறுக்கி இருக்கிறார் பிரவீன். அப்போது எதிரே யூ டர்ன் போட இருக்கும் சாலை மிட் லைன் திறப்பை அவர் பார்க்கவில்லை. எதிர் பக்கத்தில் இருந்து வந்து யூ டர்ன் போட்ட வாகனத்தை பார்க்காமல் இவர் வேகமாக சென்று இருக்கிறார். வாகனம் அருகே வந்த போதுதான் வாகனத்தில் மோதி விடுவோம் என்பதே இவர்களுக்கு தெரிந்து உள்ளது. வாகனத்தில் மோதாமல் தவிர்க்க வேண்டும் என்பதற்காக வண்டியை சட்டென நிறுத்த பார்த்து இருக்கிறார் பிரவீன்.

மீடியன்
இதில் வண்டி சட்டென விழுந்து வண்டியின் ஒரு பக்கம் மீடியனின் போய் மோதி இருக்கிறது. பிரவீன், ஹரி இருவரும் மீடியனில் போய் மோதி பின்னர் அந்த லோடு ஏற்றிய வண்டி மீதும் மோதி உள்ளனர். எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி பிரவீனுக்கு லைசன்ஸ் இல்லை. அவர் லைசன்ஸ் இல்லாமலே இத்தனை நாட்கள் வண்டி ஓட்டி இருக்கிறார் 18 வயதுக்கு முன்பாகவே அவர் வண்டியை ஓட்டி வந்துள்ளார்.

லைசன்ஸ் இல்லை
கல்லூரிக்கு இதேபோல் வேகமாக சென்றுள்ளார். அதேபோல் 12ம் வகுப்பு படிக்கும் ஹரியும் அடிக்கடி வண்டியை ஓட்டி உள்ளார். இதில் ஹரியின் போனை எடுத்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் அவர்கள் கடைசியாக ஓட்டிய ரைடின் வீடியோ இருந்துள்ளது. 114 கிமீ வேகத்தில் போகும் அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அவர்கள் இதற்கு முன்பே இப்படி சென்னையில் டிராபிக்கான சாலைகளில் இப்படி வேகமாக சென்ற வீடியோக்கள் மேலும் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது இதற்கு முன்பே இரண்டு - மூன்று முறை இரண்டு பேரும் காட்டுத்தனமாக ஓட்டி உள்ளனர்.

விபத்து எப்படி?
இந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் 48 மணி நேரம் உயிருக்கு போராடி துடித்து உள்ளார். 48 மணி நேர சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று பலியானார். அவருக்கு உடல் உறுப்புகள் பலவும் சேதம் அடைந்ததால் காப்பாற்ற முடியவில்லை. அதே சமயம் இவர்கள் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியது எப்படி. பெற்றோர்கள் இவர்களை வண்டி ஓட்ட அனுமதி கொடுத்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பெற்றோர்களிடம் இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது சட்டப்படி குற்றம் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் எதிரே வந்த லோட் வாகனம் மீதும் தவறு இருக்கிறது. அந்த வாகனமும் வேகமாக யூ டர்ன் போட்டுள்ளது. பொதுவாக இப்படி குறுக்கே புகுந்து யூ டர்ன் போடும் வாகனங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே அதற்கு முன் ஒரு கார் சென்றதால் அவருக்கு பின்பாகவே லோட் வாகன ஓட்டுநர் குணசேகரனும் சென்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் குணசேகரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications