முதலமைச்சரின் மின்னல்வேக முடிவு! 4 மாதங்களில் மாஸ் ஏற்பாடு! சென்னைக்கு செஸ் ஒலிம்பியாட் வந்த பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் தொடர் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

Recommended Video

    செஸ் ஒலிம்பியாட் சென்னைக்கு வந்தது எப்படி தெரியுமா?

    சென்னைக்கு வந்த வெளிநாட்டு செஸ் வீரர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    'இதுவரை இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகளை நாங்கள் பார்த்ததே இல்லை.. செஸ் போட்டிகளைப் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வு உருவாகும் அளவுக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்' என அனைவரும் பாராட்டும் அளவுக்கு சர்வதேச அளவில் தமிழ்நாடு கவனம் பெற்றுள்ளது.

    How did Chess Olympiad 2022 come to Chess? How did CM Stalin clinch the hosting rights?

    கவனம் ஈர்த்த தொடக்கவிழா

    முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் திட்டமிடப்பட்ட இந்தத் தொடரின் பிரமாண்ட கலைநிகழ்ச்சி கடந்த 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் ஆவணப்படம், கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், மணல் ஓவியக் கலைகள் என்று வெளிநாட்டினர் அசந்துபோகும் அளவுக்கு தொடக்கவிழா நடைபெற்றது.

    உலக நாடுகள் திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்த செஸ் தொடரை நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னை முழுக்க 'தம்பி' குதிரையின் மாஸ்கட் நிறைந்து இருக்க, சிங்காரச் சென்னையே 'செஸ்' சென்னையாக மாறிவிட்டது.

    சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. இந்தத் தொடரை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றது எப்படி.. மிகக் குறைந்த நாட்களில் உலகமே வியக்கும் அளவுக்கு ஏற்பாடுகளை செய்தது எப்படி?

    தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களோடு போட்டி போட்டுக் கொண்டு இதற்கான அனுமதியை பெற்றுள்ளது. அதோடு மிகத் துரிதமாக செயல்பட்டு இந்தத் தொடருக்கான ஏற்பாடுகளையும் பிரமாண்டமாகச் செய்துள்ளது.

    பின்னணி என்ன?

    'செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகள் எப்படி மேற்கொள்ளப்பட்டன?' என்ற பின்னணியே மிக மிக சுவாரசியமானது.. வாருங்கள் பார்க்கலாம்!

    செஸ் போட்டிகள் ஒலிம்பிக்கில் இல்லாத காரணத்தால் தனியாக செஸ் ஆட்டத்துக்காக நடக்கும் தொடர்தான் 'செஸ் ஒலிம்பியாட்'. இந்த வருடம் ரஷ்யாவில்தான் ஒலிம்பியாட் தொடர் முதலில் நடப்பதாக இருந்தது. ஆனால் யுக்ரேன்- ரஷ்யா போர் காரணமாக பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவில் தொடரை நடத்துவதற்கு மறுத்தன.

    இதனால், ரஷ்யாவை தவிர்த்து வேறு நாட்டில் தொடரை நடத்துவது என முடிவானது. போலந்து, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தத் தொடரை நடத்துவதற்கு முன்வந்தன. ஒலிம்பியாட் செஸ் தொடரை இந்தியா நடத்தவும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

    இந்தியாவின் செஸ் கூட்டமைப்பு மூலம் சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபைட் (International Chess Federation -FIDE) அமைப்பிடம் இதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்தத் தொடரை இந்தியா நடத்துவதற்கு முன்வந்த நிலையில், இதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்புமாறு சர்வதேச செஸ் கூட்டமைப்பு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களை அணுகின.

    டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே செஸ் தொடரை நடத்த முன்வந்தன. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டுமே அறிவிப்பு வந்த மறுநாளே போட்டியை நடத்துவதற்கான திட்டத்துடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பை அணுகியது.

    முதலமைச்சரின் மின்னல் வேக முடிவு

    தமிழ்நாடு அரசின் ஆர்வம் குறித்து, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங் சவுகான் கூறுகையில், ''டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்தன. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டுமே இதில் வேகம் காட்டியது.

    'ஒருநாள்கூட தாமதம் செய்யாமல் இன்றே சென்னைக்கு வாருங்கள்' என்று எங்கள் அமைப்பின் நிர்வாகிகளை தமிழ்நாடு அரசு அழைத்தது. முதலமைச்சர் ஸ்டாலினும், உடனே எங்களுக்காக நேரம் ஒதுக்கி சந்தித்தார். ஒரு நிமிடம் யோசிக்காமல், உடனே போட்டியை நடத்துவதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்தார்.

    துணிக் கடையில் சட்டை எடுக்கக்கூட தாமதம் ஆகும். ஆனால், அதைவிட வேகமாக முதலமைச்சர் சம்மதம் தெரிவித்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து, அன்று மாலையே எங்களை மாமல்லபுரம் அழைத்துச் சென்று இடத்தைக் காண்பிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டனர்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

    இதன் நீட்சியாக, போட்டியை நடத்துவது தொடர்பாக பிற மாநிலங்கள் யோசிப்பதற்குள், 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து, 'போட்டிகளை மாமல்லபுரத்தில் நடத்தலாம்' என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதற்கான ப்ளூ பிரிண்ட்டை உருவாக்கி, உடனடியாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பிடம் அளித்தது.

    ''தமிழ்நாட்டில் முடிவெடுக்கும் அரசு இயந்திரத்தின் செயல்பாடு மிக வேகமாக உள்ளது. இதனால்தான் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது'' என்கிறார், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங் சவுகான்.

    'செஸ் போட்டியை நடத்துவதற்கு பிற மாநிலங்களிடம் கருத்து கேட்கிறார்கள்' எனத் தெரிந்தவுடன், முதல் நபராக அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பேசியதன் மூலமே தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு வந்து சேர்ந்தது.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பான 'ஃபைட்' அமைப்பும், 'தமிழ்நாட்டில் போட்டி' என்றதும் ஒப்புக்கொண்டது. 'மாமல்லபுரம் கடல் அருகே போட்டி நடக்கிறது; நகரத்தில் இருந்தும் அதிக தொலைவு இல்லை' என்பதும் பிரதான காரணங்களாக அமைந்தன.

    கூடவே, தமிழ்நாட்டின் செஸ் பாரம்பரியம் உள்ளிட்ட காரணங்களால் தொடரை நடத்துவதற்கு சர்வதேச 'ஃபைட்' அமைப்பும் இசைவு தெரிவித்தது. ஒலிம்பியாட் நடக்கப் போகும் இடத்தை நேரில் பார்வையிட்ட ஃபைட் அமைப்பின் அதிகாரிகளும், 'சூப்பர்.. இங்கேயே நடத்தலாம்' என உற்சாகப்பட்டனர்.

    சர்வதேச, தேசிய அளவிலான சவால்களை எல்லாம் சமாளித்து செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்துதை தனது வசம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.

    நான்கு மாத அவகாசம்தான், ஆனால்?

    சரி.. செஸ் தொடரை நடத்துவதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லவா? அதிலும் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டவில்லை. கடந்த மார்ச் மாதம் முதல் வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் வெறும் நான்கே மாதங்களில் ஏற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    தொடருக்கான அனுமதி பெறப்பட்ட அன்றைய இரவே பணிகள் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு பணியையும் அரசு மூலம் முடுக்கிவிடப்பட்டன. தமிழ்நாட்டுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை, சிம்பிளாக நடத்தாமல் மிக பிரமாண்டமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டு பணிகள் தொடங்கின.

    தொடர் நடக்கப் போகும் அரங்கைத் தேர்வு செய்வது, வீரர்கள் தங்குவதற்கான ஹோட்டலை தேர்வு செய்வது, அவர்களுக்கான உணவு தேர்வு, வெளிநாட்டில் இருந்து செஸ் போர்டுகளை கொண்டு வருவது என முதல்கட்டப் பணிகள் நடந்தன.

    பின்னர் சென்னையை அலங்காரம் செய்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பணிகள் தொடங்கின. இதற்காக தமிழ்நாடு அரசு 92 கோடி ரூபாயை உடனே ஒதுக்கியது. தொடரை சிறப்பாக நடத்தும் வகையில் பல்வேறு துறைகளை சேர்ந்த 37 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர்.

    வெளிநாட்டினரை ஈர்த்த 'தம்பி'

    அதோடு, சர்வதேச அளவில் கவனம் பெறும் வகையில் 'தம்பி' என்ற மாஸ்கட் லோகோவும் உருவாக்கப்பட்டு சென்னை, கோவை, மதுரை என்று பல இடங்களில் வைக்கப்பட்டன. முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா திமுக நிர்வாகிகளை, 'தம்பி' என்று அழைப்பதை நினைவுகூறும்விதமாக இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    தற்போது இந்தத் 'தம்பி'தான் சர்வதேச செஸ் வீரர்களின் தங்கக் கம்பி எனும் அளவுக்கு பிரபல ஐகானாக மாறியுள்ளார். மேலும், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மூலம், தொடருக்கான தீம் பாடல் உருவானது.

    சென்னையில் நேப்பியர் பாலம் தொடங்கி பல சாலைகள் செஸ் பலகையைப் போல அலங்கரிக்கப்பட்டன. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்ட தீம் பாடல் படமாக்கப்பட்டு இணையத்திலும் வைரலானது.

    பிரேசில், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கால்பந்து உலகக்கோப்பை நடக்கும்போது அதற்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளைப் பார்த்து உலகமே வியக்கும். அதற்கு இணையாக செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் சென்னையில் செய்யப்பட்டன.

    ''சென்னை ஒலிம்பியாட் தொடருக்காக செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பணிகள் என்னைக் கவர்கின்றன. அனைத்து இடங்களிலும் ஒலிம்பியாட் தொடர்பான போர்டுகள் உள்ளன. 'மாஸ்கட் தம்பி' அனைத்து இடங்களிலும் நிரம்பியிருக்கிறார். இந்தத் தொடரை சிறப்பானதாக மாற்ற ஒருங்கிணைப்பாளர்கள் தீவிரமாக முயற்சி எடுத்துள்ளனர். அவர்களை மதிக்கிறோம்'' என்கிறார், யுக்ரேன் 'கிராண்ட்மாஸ்டர்' ஆன்ரி வோலோகிதீன்.

    அந்தவகையில், வெளிநாட்டு வீரர்களே பாராட்டும் வகையில் தொடருக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    நாற்பதே நாளில் சர்வதேச தரம்

    தவிர, தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறும் நபர்கள் இந்தத் தொடரைக் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்நாள் தொடக்க விழாவில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் சர்வதேச வீரர்களை அழைத்து வந்த நிகழ்வு, பெரும் வரவேற்பைப் பெற்றது.

    இதில் ஆச்சர்யமான விஷயம், தொடர் நடக்கும் ஹால் (Hall) பகுதி வெறும் 40 நாள்களில் சர்வதேச தரத்துக்கு மாற்றப்பட்டது. 'இதுவரை இவ்வளவு சிறப்பான அறையை நாங்கள் பார்த்தது இல்லை' என்று சர்வதேச வீரர்களே கூறும் அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன,

    மொத்தம் 700 போர்டுகளில் ஒரேநேரத்தில் 1,400 பேர் செஸ் ஆடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1,400 வீரர்கள் உள்பட 3,000 பேர் 187 நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.

    செஸ் போட்டியின் மெக்கா

    ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடக்கிறது. இந்தத் தொடரை உலகமே வியக்கும் அளவுக்கு, குறிப்பாக மாற்று கட்சிகளும் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அதிலும், பிரதமர் மோடியே, 'ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன' என வியந்து கூறும் அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    382 ஆண்டுகள் பழைமையான சென்னை நகரம்தான், 'செஸ் போட்டியின் மெக்கா' என்றழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சென்னையை, 'செஸ் ஒலிம்பியாட்' தொடர் மூலம் உலகமே திரும்பிப் பார்த்துள்ளது.

    இப்படியொரு தொடரை சென்னைக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகளும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த ஏற்பாடுகளும் பெரும் பாராட்டுகளுக்கு உரியன!

    ***

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+