கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா?
சென்னை: திமுகவில் அண்ணாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை நகர்த்திவிட்டு மு.கருணாநிதி தனது செல்வாக்கைக் கட்சிக்குள் எப்படி நிரூபித்துக் காட்டினார்? அவர் கட்சியின் தலைவரானதும், தமிழகத்தின் முதலமைச்சரானதும் எப்படி?
அண்ணாவின் திடீர் மரணம் திமுகவுக்குப் பேரிடியாகத் தலையில் இறங்கியது. கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்து யார்? என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக இடைக்கால முதல் அமைச்சராக நெடுஞ்செழியன் அமர்த்தப்பட்டார். கட்சியில் மூத்த தலைவராக இவரே கருதப்பட்டார். எனவே நாற்காலி இவருக்குத்தான் என்று பேச்சுகள் நிலவின.

மாறாகச் சனிக்கிழமை மாலை நெடுஞ்செழியன் தன் பலத்தை நிரூபிக்கும்படி கோரப்பட்டது. அது அவரது பதவிக்குச் சவாலாக மாறியது. மறுநாள் காலை ஞாயிற்றுக் கிழமை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவராகக் கருணாநிதியைத் தேர்வு செய்தனர்.
கருணாநிதியின் பெயரை மதியழகன் முன்மொழிந்தார். சத்தியவாணி முத்து அதை வழிமொழிந்தார். தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த நெடுஞ்செழியன் போட்டியிடுவதிலிருந்து பின் வாங்கிக் கொண்டார். அதுவரை விடாப்பிடியாக இருந்த நெடுஞ்செழியனுக்கு இந்தப் பூசல் மனக்கசப்பைத் தந்தது. தலைமைக்கு 'மூத்தவர்' என்ற திறமை மட்டுமே போதாது என அவர் உணர்ந்தார். அண்ணாதனக்குப் பின் கட்சிக்கு வாரிசாக யாரையும் பரிந்துரைக்கவில்லை. அவரது தேர்வு நெடுஞ்செழியனாகவே இருந்திருக்கும் என்று ஒரு ஊகம் பரவியது.
ஏனெனில் திமுகவை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்களில் நெடுஞ்செழியனும் ஒருவர். அந்தப் பட்டியலில் கருணாநிதிக்கு இடமிருக்கவில்லை. அண்ணா காலத்தில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர் நெடுஞ்செழியன். இவரது செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தனது பொதுச் செயலாளர் பதவியை 1955 முதல் 1960 வரை நெடுஞ்செழியனுக்கு விட்டுக் கொடுத்திருந்தார். மறுபடியும் 1960இல் தான் அண்ணா கட்சிக்குப் பொதுச்செயலாளராக வந்து அமர்ந்தார்.
நெடுஞ்செழியன் வீழ்ச்சி ஏன்?
மேலும் அண்ணா 1962 தேர்தலில் தோற்றதும் சட்டமன்றத்தில் 1962 முதல் 76வரை திமுகவைச் சபையில் வழிநடத்தி வந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் தான். 67இல் அண்ணா முதல்வரான போது அமைச்சரவையில் இரண்டாவது இடம் இவருக்கே வழங்கப்பட்டிருந்தது. அண்ணாவுக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவர் சிகிச்சைக்குச் சென்றபோது அவரது கவனித்து வந்த அனைத்து துறைகளையும் நெடுஞ்செழியனே பொறுப்பேற்றுக் கொண்டார். எனவே அண்ணா மறைந்த உடன் அவர் இயற்கையாகவே அரசைக் காப்பாற்றும் இடைக்கால முதல்வர் பொறுப்புக்கு வந்தார்.
ஆனால், கட்சிக்குள் நீருக்குள் பூத்த நெருப்பாகக் கருணாநிதிக்கு ஒரு ஆதரவு இருந்ததை நெடுஞ்செழியன் அதுவரை உணரவே இல்லை. பிணக்குகள் இருந்தன. அது பிரிவாக மாறும் என அவர் நம்பவில்லை. முடிந்தவரை ஆட்சிக் கட்டிலில் அமர ஆதரவைத் திரட்டிப் பார்த்தார். பலன் கிடைக்கவில்லை.
1969 ஜூலை 27 ஆம் தேதி திமுகவின் தலைவரானார் மு.கருணாநிதி. நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர். எம்.ஜி.ராமச்சந்திரன் பொருளாளர் ஆனார். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் கட்சிக்குள் தலைவர் பதவி இல்லை. அந்த இடம் பெரியாருக்குத்தான் என அறிவித்திருந்தார் அண்ணா. அவர் மறைவுக்குப் பின் கட்சியின் உயர்மட்டக் குழு கட்சிக்குள் அதிகார பூசல் உண்டாவதைத் தடுப்பதற்காக புதிதாகத் தலைவர் பதவியை உண்டாக்கியது. அது கருணாநிதிக்குச் சென்றது. பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன் அமர்ந்தார். கட்சிக்குள் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தலைவருக்கும் பொதுச்செயலாளருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதால், திமுகவுக்குள் ஏற்பட இருந்த பிரிவினைத் தடுக்கப்பட்டது. முதல்வராக மு.கவும், கட்சி அதிகாரத்திற்கு நெடுஞ்செழியனும் சம அளவில் பங்காற்றத் தொடங்கினர்.
முதல்வராக வருவதற்கு பெரியாரின் ஆதரவு கருணாநிதிக்குக் கிடைத்தது. பெரியாரின் நேரடி அரசியல் எதிரியான ராஜாஜியும் மு.கருணாநிதியை ஆதரித்தார். அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "அண்ணாவுக்குப் பிறகு, திமுக சட்டசபையாளர்களின் தலைவராக ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.கருணாநிதிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவருக்கு ஏற்பட்டுள்ள பொறுப்புக்களை ஆற்றுவதில் பூரண வெற்றி பெருவராக, ராஜ்யத்தைத் திறமையுடனும் நேர்மையுடனும் நீதியுடனும் நிர்வகிப்பதே அவரது முக்கியமான கருத்தாக இருக்க வேண்டும். அவரது கட்சியின் பலத்தை உயர்த்தவும் இதுவே வழியாகும். முதன் மந்திரியாகப் பதவிப் பிரமாணம் ஏற்றுவிட்ட பின் கட்சி பற்றிய கருத்தின்றி மக்களின் எல்லாப் பிரிவினருக்கும் பணிபுரிவது அவர் கடமையாகும்" எனக் கோரியிருந்தார்.
அண்ணாவைவிட வகுப்புவாத கொள்கையில் ஒருபடி முன்வரிசையில் நின்றவர் கருணாநிதி. எனவே அவரது வருகை அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும்படி இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டிருந்தார் ராஜாஜி. அண்ணா காலத்தில் திமுக தலைமைப் பொறுப்பிலிருந்தவர்கள் மு.கருணாநிதியைவிட முற்பட்ட சாதி பிரிவைச் சேர்ந்தவர்கள். அத்துடன் மேற்பட்ட தலைவர்கள் அனைவரும் பட்டதாரிகள். மேடைகளில் பேராசிரியர், நாவலர் என அடைமொழிப் போட்டு அடையாளம் காணப்பட்டனர்.
கருணாநிதி வென்றது எப்படி?
ஆனால், கருணாநிதி பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காதவர். கல்லூரி வளாகத்திற்குள் கூட கால் எடுத்து வைக்காதவர். ஆயினும் பட்டதாரிகள் நடத்திய கட்சி சார்பு பத்திரிகைகளைவிட 'முரசொலி'யை காரமாக நடத்தியவர். நிதி திரட்டுவதிலும் பிரச்சார வியூகங்களை வகுப்பதிலும், மற்றவர்களைவிட முந்திக் கொண்டு செயல்பட்டவர். ராயபுரத்தில் இயங்கி வந்த கட்சித் தலைமை அலுவலகத்தை மவுன்ட் ரோடுக்கு மாற்றி, 'அன்பகம்' எனக் கட்சிக்கு புதிய சொத்தை உருவாக்கித் தந்தவர். அதற்காக அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.
திரைப் புகழ், பேச்சாற்றல் ஆகியவற்றால் கழகத்திற்குள் தனக்கு எனத் தனிப் படையை உருவாக்கி வைத்திருந்தார் கருணாநிதி. 1968இல் நடந்த உட்கட்சித் தேர்தலில் ஒரே ஒரு மாவட்டத்தைத் தவிர, அனைத்திலும் மாவட்டச் செயலாளர் பதிவை மு.கருணாநிதியின் ஆதரவாளர்களே வெற்றி பெற்றனர். ஒரு வகையில் அவர் பல மாவட்டங்களுக்குச் சென்று மேடைப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டது, தமிழ்நாடு முழுக்க ஆதரவாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.
அண்ணாவுக்குப் பின் மக்களால் கருணாநிதி தேர்வு செய்யப்படவில்லை. அவர் தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் முதல்வரானார். ஆனால், அதற்குப் பின்னால் 10 ஆண்டுகள் அதிகாரத்தை அவரது செல்வாக்கினால் மட்டுமே தக்கவைத்து கட்சியை மேலாக வளர்த்தார்.
- எழுதியவர் கடற்கரய்
-
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications