முகுல் ரோஹட்கி வைத்த ஒரு வாதம்.. ஸ்டன் ஆன அமலாக்கத்துறை.. டாஸ்மாக் வழக்கு அடியோடு மாறியதே அங்குதான்!
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி வைத்த வாதங்கள் இன்று வழக்கில் பெரிய அளவில் திருப்பம் ஏற்பட காரணமாக அமைந்தது.
டாஸ்மாக் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

வாதம்:
டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி வைத்த வாதங்கள் இன்று வழக்கில் பெரிய அளவில் திருப்பம் ஏற்பட காரணமாக அமைந்தது.
டாஸ்மாக் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது அமலாக்கத்துறை.. தனிமனித உரிமை எங்கே போனது? ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென் டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது?
வழக்கில் ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்துவிட்டனர். அந்த அதிகாரி மீது விசாரணை நடக்கும் போது இவர்களை அரசு அலுவலகம் ஒன்றின் உள்ளே எப்படி செல்ல முடியும்? என்று டாஸ்மாக் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகள் பதில்
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி கவாய், அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது; வரம்பு மீறி நடக்கிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் டாஸ்மாக் தொடர்பான வழக்கில், அதிகாரிக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை?
தனி நபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா. எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ?டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தன்னுடைய எல்லைகளை தாண்டி செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளது என்று அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடரும் ரெய்டுகள்
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications