எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஈசியா ஜெயித்தது எப்படி? விஜய்யால் முடியுமா? திருமாவளவன் Deep analysis
சென்னை: விஜய் அரசியல் ரீதியாக என்ன மாதிரியான சவால்களை சந்திக்க இருக்கிறார் என்பது பற்றி மிக விரிவாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். மேலும் தவெகவுடன் கூட்டணி ஏற்படுமா? என்பதற்காக விளக்கத்தையும் அளித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கி இன்னும் கொள்கையை அறிவிக்கவே இல்லை. மாவட்டம் தோறும் நிர்வாகிகளை அவர் இன்னும் நிரப்பவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது தவெக தமிழக மக்களின் உரிமைக்காக ஒரு போராட்டத்தைக் கூட நடத்தவே இல்லை. ஆனால், 2026 தேர்தல் களம் என்று கட்சித் தொடங்கும் போதே விஜய் அறிவித்துவிட்டார்.

ஆனால், 1990இல் விசிகவை மதுரையில் தொடங்கிய திருமாவளவன், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தேர்தல் பாதையைப் புறக்கணித்தார். சமூக இயக்கமாகவே இருக்கவேண்டும் எனப் பல போராட்டங்களைக் கையில் எடுத்தார். இப்படி திமுகவைக் கூடச் சொல்ல முடியும். 1949 கட்சி ஆரம்பிக்கும் போது தேர்தல் போட்டியிட்டு முதல்வராக வேண்டும் என அண்ணாதுரை அறிவிக்கவில்லை.
தனது கட்சியை தொடங்குவதற்கு முன்னால் திருமாவளவன் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். மூப்பனாருடன் சேர்ந்து மூன்றாவது அணிக்கும் போதுதான் அவர் தனது வேலையை ராஜினாமா செய்தார். அதற்கு முன்பு அரசு ஊழியராக இருந்த போது அவர் சும்மா இருக்கவில்லை. பல போராட்டங்களை நடத்தினார். சாதி ஒழிப்பில் வீரமாக முழங்கினார். அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்து என்பது பற்றி திருமாவளவன் ஒரு ஊடகத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், "1999இல் ஆகஸ்ட் 17 அன்றுதான் எனது அரசு பதவியை நான் ராஜினாமா செய்தேன். தடய அறிவியல் துறையில் பணியாற்றி வந்தேன். 11 வருடங்கள் அந்தத் துறையில் பணியாற்றி இருக்கிறேன். முதன்முதலாகக் கோயமுத்தூரில் தான் பணி நியமனம் கிடைத்தது. 1987 டிசம்பர் 7 ஆம் தேதி பணியில் சேர்ந்தேன். அந்த ஆண்டு 1987 டிசம்பர் 24 அன்றுதான் எம்.ஜி.ஆர் இறந்தார்.
அடுத்த முதல்வராக வந்த ஜானகி புதியதாக வேலை நியமனம் பெற்ற 7 பேரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். திரும்பச் சட்டக்கல்லூரியில் வந்து படிக்க ஆரம்பித்தேன். மறு உத்தரவு வந்த பிறகே மதுரையில் போய் பணியில் சேர்ந்தேன். அங்கே சென்ற பிறகுதான் அரசியல் இயக்க செயல்பாடு ஆரம்பித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய் அரசியல் எண்ட்ரி பற்றியும் சில விளக்கங்களை அளித்துள்ளார். திருமாவளவன் பேசுகையில், "தேர்தல் அரசியலில் எதிர்பார்க்காத வெற்றியும் கிடைக்கலாம். படுதோல்வியும் ஏற்படலாம். இரண்டுமே நடக்கும். விஜய் இப்போது அரசியலுக்கு வருகிறார். அவர் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர் மாதிரி குறுகிய காலத்தில் ஒரு வெற்றியை அடைய முடியுமா? எனக் கேட்டால், நிச்சயம் முடியாது என்பதே என் பதில்.

அன்றைக்கு மக்களிடம் இருந்த விழிப்புணர்வு என்பது வேறு. இன்றைய நிலை வேறு. 70களில் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது இன்றைக்கு மக்களிடம் உள்ள விழிப்புணர்வு இல்லை. எம்.ஜி.ஆரைவிட என்.டி.ஆர் சீக்கிரம் ஆட்சியைப் பிடித்துவிட்டார். ஜெயலலிதா கூட தனியாகக் கட்சி ஆரம்பித்து வரவில்லை. ஏற்கெனவே செல்வாக்காக இருந்த கட்சியிலிருந்து வெற்றி பெற்றார்.
விஜயகாந்த் கூட எம்.ஜி.ஆர் அளவுக்கு அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவராக வந்தார். அது ஒரு சாதனைதான். ஆனால், முதல்வராக வேண்டும் என்பதுதானே விஜயகாந்த் கனவு. இன்றைக்கு வெறும் சினிமா புகழை மட்டுமே கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது. எம்.ஜி.ஆருடன் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் திமுகவில் மிகப்பெரிய தலைவராக இருந்தவர்கள். அந்த வாய்ப்பு சிவாஜி, விஜயகாந்த் ஆகிய இருவருக்கும் அமையவில்லை. அப்படி ஒரு படை தேவை. விஜய் போன்று எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும் தனித்துச் சந்திக்க முடியாது. கூட பல தளபதிகள் தேவை.
விஜய் கட்சி ஆரம்பித்த உடனேயே அவருடன் கூட்டணி விசிக வைக்குமா எனக் கேட்கிறார்கள். இது ஒரு முதிர்ச்சியற்ற பார்வை. ஏனென்றால் விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் மக்கள் பிரச்சினைக்காகப் போராட வேண்டும். களப்பணி செய்ய வேண்டும். நிர்வாகிகளைப் போட வேண்டும். கொள்கையை அறிவிக்க வேண்டும். செயல்பாட்டால் தன்னை ஒரு கட்சியின் தலைவர் என அவர் நிரூபிக்க வேண்டும். இப்படிப் பல விசயங்கள் உள்ளன. அதன் பிறகே கூட்டணி குறித்து விவாதிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications