ஆங்கிலம் தெரியாத உ.பி பையன்! 15 வயதில் பொறியியல் மாணவன்! ‘பேடிஎம்’ சர்மா கரை ஏறுவாரா?
சென்னை: பேடிஎம் பணப்பரிவர்த்தனை செயல்பாட்டை ரிசர்வ் வங்கி முடக்கி உள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலேயே மிகப் பெரிய மக்கள் ஆதரவை பேடிஎம் பெற்றது. அதன் வளர்ச்சி அசுரத்தனமானது.
மோடி அரசு 2016 ஆண்டு எடுத்த பணமதிப்பிழப்பு முடிவால், பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி எவரெஸ்ட் மலைக்கு இணையாக உயர்ந்தது. உண்மையிலேயே காசு மழையில் நனைந்தார் அதன் முதலாளி விஜய் சேகர் சர்மா.

யார் இந்த விஜய் சேகர் சர்மா?
யார் இந்த விஜய் சேகர் சர்மா? இவரது பின்புலம் என்ன? ஆராய்ந்து பார்த்தால் ஒரு சாகச வீரருக்கு இணையான கதைகள் உள்ளே புதைந்துள்ளன. அதை ஒவ்வொன்றாக நோண்டி வெளியே எடுக்கிறது இந்தக் கட்டுரை.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளது அலிகார் நகரம். உலகமே திரும்பிப் பார்க்கவைக்கும் அலிகார் பல்கலைக்கழகம் உள்ள மாபெரும் வரலாற்று நகரம் இது. அந்த ஊரில் பிறந்தவர்தான் இந்த விஜய் சேகர் சர்மா.
அந்த மாநிலத்தில் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஆங்கிலம் என்றால் என்ன பாஷை என்பதே தெரியாது. ஆங்கிலத்தில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன என்றால், கையை பிசைந்துகொண்டு நிற்பார்கள். அதற்கு விதிவிலக்கான இளைஞர் இல்லை விஜய் சேகர் சர்மா. அவருக்கும் ஆங்கிலத்தில் பேசத் தெரியாது.
அப்படி ஒரு காலத்தில் ஆங்கிலமே பேசத் தெரியாத இந்த விஜய் சேகர் சர்மா உருவாக்கிய நிறுவனம் தான் 'பேடிஎம்'. டிஜிட்டல் இளம் தலைமுறையினரின் காதுகளில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்த 'பேடிஎம் கர்ரோ' என்ற விளம்பரம் இனி யார் காதுகளிலும் கேட்கப்போவதில்லை.

விஜய் சர்மாவின் அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். அவரது பெயர் பிரகாஷ் சர்மா. பொதுவாக வாத்தியார் மகன் மக்கு என்று தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி ஏனோ உத்தரப் பிரதேச இளைஞரான விஜய் சர்மாவின் வாழ்க்கையோடு பொருந்திப் போகவில்லை.
16 வயதில் பொறியியல் பட்டதாரி:
இந்த ஆசிரியரின் மகன் 14 வயதிலேயே தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். அடுத்து அவருக்குள் பொறியியல் பட்டதாரி ஆகவேண்டும் என்ற கனவு இருந்தது.

அதே வேகத்தோடு பொறியியல் கல்லூரி வாசல் போய் நின்றார். அவர்கள் பள்ளி மாணவனைக் காதை தொடச் சொல்லி வயதை அளவிடுவதைப் போல, அவரை சான்றிதழ்களைக் காட்டச் சொல்லிப் பரிசோதித்தனர்.
பின்னர் பொதுவாக 15 வயது நிரம்பினால்தான் பொறியியல் சேர முடியும் என்று ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அவருக்கு அளித்தனர்.
வாழ்க்கையில் மிக வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என விரும்பிய, விஜய் சர்மாவை பொறியியல் படிப்பில் சேர ஒரு வருடம் காத்திருக்கும்படி அறிவுரை கூறினர்.
இந்த இடைவெளியை வீணாக்கி விடவேண்டாம் என விஜய் மனம் எச்சரித்தது. ஆகவே இந்தக் காலத்தில் ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டார். அதற்காக நிறைய ஆங்கில மொழியை கற்பதற்காகப் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிஎன்பிஐ செய்தி நிறுவனத்திற்கு விஜய் சேகர் சர்மா ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், ஒரு காலத்தில் ஆங்கிலம் தெரியாத இந்த இளைஞரா இப்படி இங்கிலீஷில் பொளந்து கட்டுகிறார் என்று வியப்பு மேலிடும். அந்தளவுக்கு அவரது நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது.
2022 மிக முக்கியமான ஆண்டு:
அந்தப் பேட்டில் அவர் 2022 மிக முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில் இளம் தலைமுறை ஒன்று புதியதாக வளர்ந்துவருவதைப் பார்த்தேன். அவர்களுக்குத் தேவையான ஒரு புதிய ஐடியாவை உருவாக்கினேன். அது எனது அதிர்ஷ்டம் என்று கூறி இருந்தார்.
மேலும், paytm இப்போது adult company ஆகப் பார்க்கப்படுகிறது என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த அளவுக்கு வாழ்வில் உயர்ந்த விஜய் சர்மா, 1994 ஆம் ஆண்டு டெல்லி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் சேர்ந்து படிக்கும் முடிவை எடுத்தார். அப்போதும் அவருக்கு 16 வயது நிறைவடையவில்லை. ஆனாலும், இந்த 'முந்திரி கொட்டை' மாணவனுக்கு ஒரு இடம் தரலாம் என முடிவு செய்தது அந்த டெல்லி கல்லூரி.
சேரும் வரை இருந்த உற்சாகம், கல்லூரில் இடம் கிடைத்த பிறகு விஜய்க்குக் காணாமல் போனது. காரணம், இவரது வயது வரம்பு. அங்கே வகுப்பிலிருந்தவர்கள் அனைவரும் இவரைவிட வயத்தில் மூத்தவராக இருந்தனர். ஆகவே இந்தப் பொடியனுக்குள் ஒரு அழுத்தம் உருவானது. பெரும்பாலான நேரத்தைத் தனிமையில் கழித்தார் விஜய். அதன் பிறகு அவருக்குப் புத்தகங்கள் நண்பர்களாயின.

டிஜிட்டல் சாம்ராஜ்ஜிய உலகம்:
அதைக் கொண்டு தனது திறமையை நிரூபிக்கப் போராடினார். அப்படிப் போராடியதால் தான், அவரால் இண்டர்நேஷனல் கார்பரேட் கம்பெனிகள் கொடிகட்டிப் பறந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சாம்ராஜ்ஜியத்திற்குள் ஒரு வெற்றியாளராக வளர்ந்து வந்து பின்னாளில் நிற்க முடிந்தது.
one97 நிறுவனத்தைத் தொடங்கினார். அது கொஞ்சம் கொஞ்சமாக வேர் பிடித்து வளரத் தொடங்கியது.
2009இல் பல கார்பரேட் நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறையில் காலடி எடுத்து வைத்தன. வெறும் பி.எஸ்.என்.எல் என்பது மாறி பல கம்பெனிகள் வந்தன. அதற்கு வாடிக்கையாளர்களும் அதிகரித்தனர்
குறிப்பாக மொபைல் போனுக்கு டாப் அப் செய்வது பெரிய சிக்கலாக இருந்தது. அதை மனதில் கொண்டு மொபைல் பேலன்ஸ் டாப் அப் வழங்கும் சேவையை பேடிஎம் தொடங்கியது.

அதுவரை டாப் அப் செய்யக் கடைகளுக்குப் போய் வரிசையில் நின்று அல்லாடி வந்த இளம் தலைமுறைக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது. அதனை அடுத்து 2012இல் பேமண்ட் கேட்வேஸ், 2013ல் செமி குளோஸ்டு வாலெட்ஸ் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றார்.
அங்குத் தொடங்கியதுதான் இவரது ஏறுமுகம். முதலில் 1ரூபாய் தொடங்கி 100 ரூபாய் வரையான சின்ன அளவிலான பணப்பரிவர்த்தனையைப் பற்றி வங்கிகள் கவனம் செலுத்தாமல் இருந்தது விஜய் சர்மாவுக்குப் பிடிபட்டது.
அங்கே முதலில் கண் வைத்தார் சர்மா. அதாவது வங்கிக்குப் போகாமலே சில்லறைக் காசுகளை அனுப்பும் சேவைக்கான கதவை பேடிஎம் மூலம் திறந்துவிட்டார். அதற்கு வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இளம் தலைமுறையிடம்.
2014இல் 4ஜி அலைவரிசை நாடுமுழுவதும் பரவலானது. ரிலயன்ஸ் ஜியோவை கூவிக் கூவி விற்றுவந்தது. இதனால் இணையப் பரிவர்த்தனையிலிருந்த தடை சுவர் உடைக்கப்பட்டது.
2016 நவம்பர் 8 நள்ளிரவு நடந்த மாற்றம்:
அதனை ஒட்டி 2016 நவம்பர் 8 அன்று நாடு முழுவதும் உள்ள 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என ஒரே இரவில் அறிவித்தார் பிரதமர் மோடி. நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இது.

மக்கள் வங்கி வாசலில் நாட்கணக்காகக் காத்திருந்தனர். அப்போது பல நிறுவனங்கள் தனது மூச்சை நிறுத்திக் கொண்டன. அந்த நேரத்தில் தனது கொடியை நடுவானில் பறக்கவிட்டார் விஜய் சர்மா.
கடைக்குக் கடை பேடிஎம் அட்டைகளை வைத்தார். காசு கரை புரண்டு ஓடியது. பணம் வெள்ளம் போல் பாய்ந்தது. பெரிய முதலீடு இல்லாமல் பெரிய பெரிய வங்கிகளே அசந்து போகும் அளவுக்குப் பணப் பரிவர்த்தனை பேடிஎம் ஆப் வழியே நடந்தது.
30 கோடி வாடிக்கையாளர்கள். அதாவது ஒரு நாளைக்கு 7 மில்லியன் அளவுக்குப் பரிவர்த்தனை. இதன் மதிப்பு 9.4பில்லியன் டாலர்கள் ஆகும். இந்நிறுவனத்திற்கு 300 மில்லியன் வாலெட்ஸ் மற்றும் 30 மில்லியன் வங்கிக் கணக்குகள் புழங்கி வந்தன என்று கணிக்கப்பட்டது.
கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் படிப்பை முடிப்பதற்கு முன்பே இந்தச் சுட்டி பையன் மூளையில் பல யோசனைகள் தோன்றின. அதற்காகக் கூடுதலாக உழைத்தார் இந்த இளைஞர்.
அப்படிப் படிக்கும் காலத்திலேயே டெல்லி விமான நிறுவனத்திற்கு டிஜிட்டல் விமான அட்டவணையைத் தயாரிக்க கோடிங் புரோகிராமை எழுதினார். அதற்காக 1000 ரூபாயை வழங்கியது அந்த நிறுவனம்.
சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வருமானம்:
பொறியியல் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சாதித்துச் சம்பாதித்தால், அப்போதே நம்பிக்கை விதை அவர் மனதில் ஆழ விழுந்து அது ஆலமரமாக வேர்விட்டுக் கிளைத்தது.
அதன்பின்னர் கல்லூரியில் படிக்கும்போது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். அது போக இந்தியச் சுற்றுலா தொடர்பான ஒரு இணையதளத்தை உருவாக்கிக் கொடுத்தார். பின்னர் அதை ஒரு டெல்லி செய்தி நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதனால் விஜய் சர்மா கையில் காசு புழங்க ஆரம்பித்தது.
உலக அரங்கில் விஜய் சர்மா பக்கம் கவனம் திரும்பியது. 2016இல் ஐப்பான் சாஃப்ட் பேங்க், சீனாவைச் சேர்ந்த அண்ட் ஃபினாஷியல் ஆகிய நிறுவனங் கள் பேடிஎம் இல் முதலீடு செய்தன.

4.86 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் பேடிஎம் 40 கோடி பயனாளிகளைக் கொண்டிருந்தது. அதனைக் கொண்டு பங்குகளைச் சந்தையில் விற்கத் தொடங்கியது பேடிஎம். அப்போது நிர்ணயித்த ஒரு பங்கின் விலை அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதில் லாபம் எடுக்க முடியாது என எச்சரித்தனர்.
இறுதியில் பங்கு வாங்கியவர்களின் நிலை கவலைக்கிடமானது. ஒரே நாளில் பேடிஎம் பங்குகள் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தன. அதுவும் பட்டியல் இடப்பட்ட அன்று இது நடந்ததுதான் கொடுமை.
ரிசர்வ் வங்கி ரூ.5.4 கோடி அபராதம்:
இதில் வியப்பு என்னவென்றால் 2023 ஆண்டின் இறுதியிலேயே பணப்பரிவர்த்தனை சேவைக்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. கேஒய்சி படிவங்களைச் சரியாகச் சமர்ப்பிக்காததால், பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ.5.4 கோடியை அபராதமாக விதித்தது.
அது மட்டுமல்ல, சீனாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடன் பெற்றது தொடர்பாக பேடிஎம் நிறுவனத்திற்குச் சொந்தமான பெங்களூரு அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
அத்தனைக்கும் பிறகுதான் இன்று பேடிஎம் நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்த அன்றே இரண்டு நாள்களில் பங்குச்சந்தையில் 36.50% அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது பேடிஎம்.
பேடிஎம் மீண்டு எழுமா? இந்நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இந்தியாவில் இது தனிக்காட்டு ராஜா. இன்று கூகுள் பே என்ற சர்வதேச நிறுவனம் போட்டியாக உள்ளது. மேலும் வாட்ஸ் அப் செயலி மூலம் நீங்கள் பணம் அனுப்பலாம். இப்படிப் பல சேவைகள் விரல் நுனியில் உள்ளன.
அதிலிருந்து மீள இந்தச் சர்மா நிறைய உள் நீச்சல் பழக வேண்டும். அது சர்மாவுக்குக் கஷ்டமில்லை. அதில் கரை கடந்தவர் அவர். நிச்சயம் கரை ஏறுவார்.












Click it and Unblock the Notifications