யாரை ஏமாற்ற இந்த வேலை? பள்ளிக்கரணை பரங்கிமலை விசாரணை குழு குறித்து அறப்போர் இயக்கம் பரபரப்பு பதிவு
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்த எந்த பதிவுத்துறை ஊழியர் என்ன மோசடி செய்தார்? பரங்கிமலையில் அரசு நிலங்களை எவ்வாறு தனி நபர்கள் மோசடி பத்திரப்பதிவு மூலமாக ஆக்கிரமித்தார்கள் என்பது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்ஐஆர் பதியாமல், இதற்கு ஒரு தனி விசாரணை குழு அமைக்க என்ன தேவை இருக்கிறது? என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் அடங்கிய பல ஏக்கர் நிலங்கள், மோசடி ஆவணப்பதிவு மூலம் பல்வேறு தனி நபர்களது பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதில் பதிவுத்துறையில் பணியாற்றும் பல்வேறு அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனிநபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் தொடர்பாக முறைகேடாக பத்திரப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து உரிய ஆய்வு செய்து, முறைகேடான பதிவுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவுத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தும் விரிவாக விசாரணை செய்து உண்மை நிலையினைக் கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையிலான ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் அனுஷியா, சென்னை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.சரஸ்வதி, தாசில்தார் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்கும்.
தென்சென்னை இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பரங்கிமலையில் சுமார் 36 சர்வே எண்களில் கட்டுப்பட்ட நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என ஆலந்தூர் தாசில்தார் தெரிவித்து உள்ளார். அதனைக் கருத்தில் கொள்ளாமல் 36 வெவ்வேறு சர்வே எண்களில் அமைந்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்கள் பல்வேறு ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
பரங்கிமலையில் அரசு நிலம் தொடர்பான முறைகேடான பதிவுகள் நடந்துள்ளதா? என்பது குறித்தும், வருவாய் துறை பதிவேடுகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களை தனி நபர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டதாக பதிவுகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து, தவறு இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பதிவுத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தும் விரிவாக விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வணிகவரித்துறை இணை கமிஷனர் உமா மகேஸ்வரி, தலைமையிலான ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் துணை-கலெக்டாராகப் பணியாற்றும் த.முருகன் மற்றும் கே.இளங்கோவன் ஆகிய இருவரும் இக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவும் தனது அறிக்கையை 30 நாட்களுக்குள் அரசுக்கு அளிக்கும்." என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசின் பதிவினை டேக் செய்து அறப்போர் இயக்கம் வெளியிட்ட பதிவில், "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்த எந்த பதிவுத்துறை ஊழியர் என்ன மோசடி செய்துள்ளார். அவர் தற்பொழுது எந்த உயர் பதவியில் அமர்ந்திருக்கிறார் என்று அறப்போர் விரிவான ஆதாரங்களுடன் புகார் அளித்து பல வருடங்கள் ஆகிறது.
அதே போல பரங்கிமலையில் அரசு நிலங்களை எவ்வாறு தனி நபர்கள் மோசடி பத்திரப்பதிவு மூலமாக ஆக்கிரமித்து அதன் மீது வங்கியில் கடன் வாங்கி, கட்டிடம் கட்டி வங்கிக்கே வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்கள் என்று பல ஆதாரங்களுடன் அறப்போர் புகார் அளித்து பல மாதங்கள் ஆகிறது.
மோசடி செய்த பத்திரப்பதிவுத்துறை ஊழியர்களின் பெயர்கள் மற்றும் அதற்குரிய ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் FIR போட்டு விசாரணை நடத்தாமல், இதற்கு ஒரு தனி விசாரணை குழு அமைக்க என்ன தேவை இருக்கிறது? யாரை ஏமாற்ற தமிழக அரசு இந்த வேலையை செய்கிறது? விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போகிறதா? அல்லது KP park கட்டிட ஆய்வறிக்கையை போல ஒளித்து வைக்க போகிறதா?
சரி அடுத்த 30 நாட்களில் என்ன விசாரிக்க போகிறார்கள் என்று பார்க்கலாம். அறப்போர் புகாரை ஒரு முறை வாசித்தாலே உங்களுக்கு விசாரணை அறிக்கை கிடைத்து விடும். அதையாவது செய்கிறார்களா பார்க்கலாம். " என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications