சென்னை-செங்கல்பட்டு ஏசி மின்சார ரயில் சேவை எப்படி இருக்கு?.. உங்க கருத்தை சொல்லுங்க - தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி புறநகர் மின்சார ரயில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏசி புறநகர் மின்சார ரயிலின் நிறை மற்றும் குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை என்றாலே வெயில்தான். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்து பொதுமக்கள் சில்லென்ற பயணம் மேற்கொள்ளும் வகையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் செல்லும் வழியில் முதல்முறையாக ஏசி மின்சார ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன. இதில், 1,116 பேர் அமர்ந்தும், 3,796 பேர் நின்று செல்லும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயில் சென்னை கோட்டை, பூங்கா, எக்மோர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இரவு நேரத்தில் மட்டும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படாது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 8.35 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு 10.40 மணியளவில் கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும். பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
பின்னர், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரயில் நிலையம் வந்தடையும். இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆகவும், அதிகபட்சமாக கட்டணம் ரூ.105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி புறநகர் மின்சார ரயில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை மற்றும் குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பயணிக்கும் பணியாளா்கள், மாணவா்களின் வசதிக்காக புதிய ஏசி மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், ரயிலின் நேரம் மற்றும் இயக்கம் குறித்து பயணிகள் 63747 13251 எனும் 'வாட்ஸ்ஆப்' எண்ணில் தெரிவிக்கலாம். கருத்துகளை ஒலி வடிவில் பதிவிடாமல், எழுத்து வடிவில் மட்டும் பதிவிட வேண்டும். தெற்கு ரயில்வேயின் எக்ஸ் தளப் பக்கத்தில் இணையதள பக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications