சென்னையில் ராட்வைலர் நாய் கடித்த சிறுமி எப்படி இருக்கிறார்? டாக்டரை பார்த்தாலே அழும் சோகம்
சென்னை: ராட்வைலர் நாய் கடித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் சென்னை சிறுமி மீளவே இல்லை என அவருடைய தாத்தா ஏழுமலை தெரிவித்துள்ளார்.
நேற்று சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் 2 நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக உள்ளவர் ரகு. இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு சுதிக்ஷா என்ற 5 வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில் மே 5 ஆம் தேதி இரவு அந்த சிறுமியை ராட்வைலர் நாய்கள் கடித்து குதறின. இதில் சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு தாய் சோனியா ஓடி வந்து குழந்தையை நாய்களிடம் இருந்து மீட்க முயற்சித்தார். ஆனால் அவரையும் கடித்தது.
அப்போது அருகே இருந்த மதன் என்ற இளைஞர் அந்த சிறுமியின் கால்களை பிடித்து இழுத்து வெளியே தூக்கிக் கொண்டு ஓடினார். இதையடுத்து சிறுமியை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்குமாறும் அதற்கு என்ன செலவானாலும் தான் பார்த்துக் கொள்வதாகவும் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கூறியதன் பேரில் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டிலிருந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் நாய்களை உரிமம் இன்றி வளர்த்ததுடன் முறையாக பராமரிக்கப்படவில்லை. 7 நாட்களுக்குள் நாய்களை அப்புறப்படுத்த தவறினால் மாநகராட்சி இந்த நாய்களை பறிமுதல் செய்யும். நாயின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகழேந்தி, ஆண், பெண் என இரு நாய்களை வளர்த்து வருகிறார். அவை ராட்வைலர் இனத்தை சேர்ந்தவை. மிகவும் ஆக்ரோஷமான நாய்கள் என அறியப்படுகின்றன. இந்த நாய்களுக்கு ஒரு குட்டியும் வீட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாய்களின் குட்டியை விற்பனையும் செய்துவருகிறாராம். புகழேந்தி எங்கு சென்றாலும் அந்த நாய்களை கடிவாளம் இல்லாமல் சர்வ சாதாரணமாக உலவ விடுவார் என அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி நோட்டீஸை அடுத்து அந்த இரு நாய்களும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புகழேந்தியின் பண்ணை வீட்டில் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை நடந்தது. நாய்களின் உரிமையாளர் சிறுமிக்கான முழு சிகிச்சை செலவையும் ஏற்பதாக கூறிவிட்டு சிவகங்கை சென்றுவிட்டார்.
சென்னை மாநகராட்சி நிர்வாகமும் சிகிச்சை செலவை ஏற்பதாக சொன்னது. ஆனால் இதுவரை யாருமே ஏற்கவில்லை என சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இத்தனை பெரிய மருத்துவமனையில் எங்களால் எப்படி அவ்வளவு பணத்தை செலுத்த முடியும். எனவே நாய்களின் உரிமையாளரும் தமிழக அரசும் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் சிறுமியை கடந்த இரு தினங்களாக டிஸ்சார்ஜ் செய்து கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாம். ஆனால் சிறுமி இன்னும் இரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓரளவுக்கு குணப்படுத்தி அனுப்ப வேண்டும் என சிறுமி தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று டிஸ்சார்ஜ் என சொல்லப்பட்டு அது கேன்சல் ஆகிவிட்டது.
சிறுமி இன்னும் இரு நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருப்பார் என அவருடைய தாத்தா ஏழுமலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் குழந்தைக்கு தலையில் கட்டை பிரித்துவிட்டனர். இன்னும் இரு நாட்கள் மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு பிறகு வீட்டுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு கட்டை மாற்றும் போதெல்லாம் வலியால் அழுகிறாள். டாக்டரை பார்த்தாலே அழுகிறாள். இன்னும் சிறுமி நாய் கடித்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications