கலைஞர் மகளிர் உரிமை தொகை.. எத்தனை பேரை புதிதாக சேர்க்க திட்டம்.. அரசு தந்த திடீர் ட்விஸ்ட்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த திட்டத்தில் புதிதாக எத்தனை பேரை சேர்க்க திட்டம்? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி (அண்ணா பிறந்த நாளில்) திட்டத்தை தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் 1000 ரூபாய் அரசால் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட சமயத்தில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்தார்கள். அடுத்தடுத்தாக மேல்முறையீடு செய்து விண்ணப்பித்தவர்களும் புதிதாக பயனாளர்களாக இணைக்கப்பட்டார்கள். அந்த வகையில் அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறும் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆக அதிகரித்தது.
இதனிடையே கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் புதிதாக ரேஷன் கார்டு பலருக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி நிலவரப்படி புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி 1 கோடியே 14 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024ம் நிதியாண்டில் 8 ஆயிரத்து 123.83 கோடி ரூபாயும், 2024-25ம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுடைய விண்ணப்பங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்பதை தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தமிழக அரசு தகவல் தெரிவிக்கவில்லை. இதேபோல, புதிதாக எத்தனை பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து இருக்கிறார்கள்?, அவர்களில் எத்தனை பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது? என்ற வினாக்களுக்கும், "அரசின் கொள்கை முடிவு குறித்த தகவல்கள் என்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவல் வழங்க இயலாது" என்று தமிழக அரசு மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications