தமிழ்நாட்டில் புத்தாண்டில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை எவ்வளவு.. வெளிவராத உண்மை
சென்னை: தமிழ்நாட்டில் புத்தாண்டின் போது ரூ.430 கோடிக்கு மது விற்பனை ஆகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. வழக்கமாக தினமும் 150 கோடி வரை மதுவிற்பனையாகி வரும் நிலையில், புத்தாண்டின் போது டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மதுவிற்பனை படுஜோராக நடந்தது..
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கிறது. இதில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கின்றன. இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. பொதுவாக டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறும்.. வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுவது வழக்கமாகும்.

பொதுவாகவே வார இறுதி நாட்கள், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மதுவிற்பனை மிக அதிகமாக இருக்கும். இதில் உச்சபட்சம் என்றால் புத்தாண்டில் தான் மதுவிற்பனை மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் 2 நாட்கள் ரூ.400 கோடிக்கு மேல் மது விற்பனை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதையும் தாண்டித்தான் மதுவிற்பனை நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் அந்தந்த பகுதிகளில் மது விற்பனை நிலவரத்தை தெரிவிப்பது வழக்கமாகும்.ஆனால் புத்தாண்டின் போதும் சரி, பொங்கல் பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தின் போதும் சரி, டாஸ்மாக் கடைகளில் வசூல் நிலவரம் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்து வாடிக்கையாக இருக்கும். இதனால் இந்த விவாதம் மற்றும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விவரங்கங்கள் பண்டிகை நாட்களில் மண்டல வாரியாக வெளியிடப்படுவது இல்லை.. அதன்படி சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை ஆகிய 5 மண்டல மேலாளர்கள் புத்தாண்டு மது விற்பனை விவரத்தை வெளியிடவில்லை.. டாஸ்மாக் தலைமை அலுவலகமும் எந்த தகவலையும் வெளியிடுவது இல்லை..
இந்த சூழலில், டிசம்பர் 31, ஜனவரி 1-ந்தேதிகளில் சுமார் ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது புத்தாண்டு மது விற்பனையில் தமிழ்நாட்டில் மதுவிற்பனை பொதுவாகவே அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்திருப்தாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக தெலுங்கானாவில் ரூ.402 கோடிக்கும், ஆந்திராவில் ரூ.328 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ.308 கோடிக்கும், கேரளாவில் ரூ.108 கோடிக்கும் (டிசம்பர் 31-ந்தேதி மட்டும்), புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கும் மது விற்பனை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு கடந்த நிதியாண்டில் மட்டும் 450000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. வரும் ஆண்டில் 500000 கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications