ஆர்யா ரசிகர்.. மிமிக்ரி பேசுவதில் வல்லவர்.. ஜெர்மனி பெண் வழக்கில் கைதான இருவர் பகீர் வாக்குமூலம்!
சென்னை: நடிகர் ஆர்யா பெயரில் மோசடி செய்து ஜெர்மனி பெண்ணிடம் ரூ 70 லட்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் பல திடுக் தகவல்களை அளித்தனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் விட்ஜா. இவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரிடம் நடிகர் ஆர்யா ரூ 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் புகாரை அனுப்பியுள்ளார்.
அந்த புகாரில் நடிகர் ஆர்யாவுடன் சமூகவலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தும், கொரோனாவால் தான் பண கஷ்டத்தில் இருப்பதாக கூறி இந்த பெண்ணிடம் ரூ 70.40 லட்சத்தை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக வாங்கியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
இதையடுத்து இந்த வழக்கானது சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த வித மெசேஜ்களோ போன் கால்களோ ஆர்யாவின் செல்போனிலிருந்து வரவில்லை என்பதை சைபர் கிரைம் போலீஸார் உணர்ந்தனர்.

நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பில்லை
இதையடுத்து ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் எந்த தொடர்புமில்லை என கண்டறிந்தனர். அப்படியென்றால் ஆர்யா பெயரை பயன்படுத்தி யாரோ மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பண பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு நடிகர் சூர்யா பெயரில் மோசடி செய்த நபர் குறித்து தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய ஐபி அட்ரஸை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கியிருந்த இருவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

புகைப்படத்தை வைத்த நபர்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான், அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் ஆகியோர் என தெரியவந்தது. இதில் முகமது அர்மான் நடிகர் ஆர்யாவின் தீவிர ரசிகர். ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து முகநூலில் கணக்கு ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல இளம்பெண்களை நண்பராக்கியுள்ளார்.
Recommended Video

விட்ஜாவில் செல்போன் எண்
பின்னர் தன்னை ஆர்யா போல் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெர்மனி பெண் விட்ஜாவிடம் பேசி அவரது செல்போன் எண்ணையும் பெற்றுள்ளார். மேலும் அந்த பெண்ணை காதல் வலையில் விழவைத்து ஆர்யாவை போல் குரலை மாற்றி பேசியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த பெண்ணுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் ஆர்யாவின் தாய் பேசுவது போல் அவரே குரலை மாற்றி விட்ஜாவிடம் பேசியுள்ளார். மேலும் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் திருமணம் நடந்தது குறித்து விட்ஜா கேட்டதற்கு அது படத்திற்கான ஷூட்டிங் என அவரது குரலில் அந்த நபர் பேசியதும் தெரியவந்தது.

ரூ 70 லட்சத்தை பெற்ற மோசடி நபர்
அந்த பெண்ணிடமிருந்து 70 லட்சம் ரூபாயை பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. மோசடி செய்தவுடன் விட்ஜாவை ஆர்யாவின் தாயார் மிரட்டுவது போல் அந்த நபர் பேசியதும் தெரியவந்தது. ஜெர்மனி பெண், முகமது அர்மானின் மைத்துநர் முகமது ஹூசைனியின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இவர்கள் இருவரையும் சென்னை அழைத்து வந்த போலீஸார் வேறு எந்த பெண்ணிடமாவது மோசடியில் ஈடுபட்டனரா என்பதை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆர்யா நன்றி
நான் அவனில்லை என ஆர்யா பல முறை சொல்லியிருந்த நிலையில் தற்போது உண்மையான குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தமையால் அவர் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் உண்மையான குற்றவாளியை கண்டறிந்து கைது செய்தமைக்காக போலீஸ் கமிஷனர், சைபர் கிரைம் கூடுதல் ஆணையர், ஒட்டுமொத்த சைபர் கிரைம் டீமிற்கும் நன்றி. இந்த மோசடி எதிர்பார்க்காத மன அதிர்ச்சியை தந்தது என ஆர்யா பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications