சுனிலுக்கு ராகுல் ஓ.கே. சொன்னது எப்படி தெரியுமா? பின்னணியில் அவர் இருக்கிறாராம்! என்ன விவரம்?
சென்னை: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பட்டியலில் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலுவை ராகுல்காந்தி டிக் அடித்ததன் பின்னணியில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இருக்கிறாராம்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வியூக வகுப்பாளராக டி.கே.சிவக்குமாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார் சுனில் கனுகோலு.
இந்நிலையில் கர்நாடக ரூட்டை பிடித்து கணக்கச்சிதமாக டெல்லி அக்பர் சாலையை சென்றடைந்திருக்கிறார் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலு.

தேர்தல் வியூகம்
தேர்தல் வியூக வகுப்பாளர் என்ற வார்த்தையே 2014-ம் ஆண்டுக்கு பிறகு தான் இந்தியாவில் பிரபலம் ஆகத் தொடங்கியது. அது வரை அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளர் என்று யாரும் இருந்ததில்லை. ஆரம்பத்தில்
பிரசாந்த் கிஷோருடன் இணைந்து ஐ-பேக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுனில் கடந்த 2015-ம் ஆண்டு அங்கிருந்து விலகி தனக்கென தனி டீமை உருவாக்கி இன்றைய
தமிழக முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினுக்கு பணியாற்ற வந்தார்.

சுனில் வியூகம்
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுக்கு சுனில் வகுத்துத் தந்த திட்டம் தான் நமக்கு நாமே திட்டம். தமிழகம் முழுவதும் ஸ்டாலினை பயணம் மேற்கொள்ள வைத்து அப்போது ஊடகங்களின் கவனத்தை வெகுவாக அவர் மீது திருப்பும் பணிகளை சுனில் செய்து வந்தார். அந்த தேர்தலில் தோல்வியுற்றாலும் தொடர்ந்து தனக்கான ஆலோசனைகளை வழங்கவும், அடுத்தடுத்து தேர்தல் வியூகங்களை வகுக்கவும்
சுனிலை தன்னுடன் வைத்துக்கொண்டார் ஸ்டாலின்.

அதிமுகவுக்கு பணி
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்க பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போதும் கூட சுனிலை ஸ்டாலின் தரப்பு வெளியேறச் சொல்லவில்லை. பிரசாந்த் கிஷோருடன் இணைந்து இங்கேயே பணியாற்றுங்கள் என்று
தான் கூறியது. ஆனால் ஏனோ தெரியவில்லை, அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து திமுக முகாமுக்கு குட்பை சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமி மூலம் அதிமுகவின்
தேர்தல் வியூக வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கர்நாடக பக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவினாலும் கூட பெருவாரியான இடங்களில் பெற்ற வெற்றிக்கு சுனில் வகுத்து தந்த வியூகமும் ஒரு காரணம் என நம்பினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அங்கு ஓ.பி.எஸ். தரப்பு சுனில் அண்ட் கோவுடன் உரசலில் இருந்து வந்ததால் அதிமுக முகாமிலிருந்தும் வெளியேறி பக்கத்து மாநிலமான கர்நாடகத்தின் பக்கம் கவனத்தை திருப்பினார்.

காங்கிரஸ் கட்சிக்கு
அங்கு காங்கிரஸ் மாநிலத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மூலம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு வியூக வகுப்பாளராக இருந்து
வருகிறார். டி.கே.சிவக்குமார், சித்தராமையா போன்றோருடன் சுனில் காட்டும் நெருக்கம் தான் அவரை இந்தளவுக்கு தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற வைத்துள்ளது. சுனிலை பற்றி டி.கே.சிவக்குமார் தான் வேணுகோபாலிடமும்,
ராகுலிடம் விலாவாரியாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

டி.கே.சிவக்குமார் சிபாரிசு
பிரசாந்த் கிஷோரை காட்டிலும் சுனிலின் செயல்பாடுகள் நமக்கு ஏற்றார் போல் இருக்கும் என எடுத்துரைத்திருக்கிறார். டி.கே.எஸ்.சின் பலத்த சிபாரிசை தட்ட முடியாத ராகுலும், வேணுகோபாலும் இது குறித்து சோனியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று பின்னர் ஒரு வழியாக அவரையும் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவில் இணைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications