ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்?
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் பறிமுதல் செய்யப்படும் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி? அதற்கு என்ன செய்யவேண்டும்? யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பது பழைய காலப் பழமொழி. 'தேர்தல் வரும் பின்னால், பறக்கும் படை வரும் முன்னால்' என்பதுதான் இந்தப் புதுமொழி.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் முறையான ஆவணங்களின்றி பணத்தையோ பரிசுப் பொருள்களையோ எடுத்துச் சென்றால் அதை மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் பறிமுதல் செய்வர். அதன்படிப் பார்த்தால் கடந்த ஒரு வாரத்திற்கு சுமார் 296 கோடி மதிப்பாலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கமாக 112 கோடிக்கு மேல் பிடிபட்டுள்ளது. 25 கோடி மதிப்பிலான பொருள்கள் பிடிபட்டுள்ளன.

ஒரு நபர் 50 ஆயிரம் வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது தேர்தல் ஆணையம். அதற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தால் அதனைத் தேர்தல் அதிகாரிகள் காவல்துறையின் உதவியுடன் பறிமுதல் செய்வர்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களுக்கான பறிமுதல் ரசீதை அதிகாரிகள் உடனடியாக அளித்துவிடுவார்கள். அந்த ரசீதை வைத்து தங்களின் பணத்திற்கான உரிய ஆவணத்தைக் காட்டி, மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.
இப்படி பறிமுதல் செய்யப்படும் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது என்பதில் பொதுமக்களாகிய பலருக்கும் குழப்பம் இருக்கலாம். அதற்கான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பு, இது தொடர்பான தேவையான தகவலை அறிந்துகொள்வோம்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்தது. அதையொட்டி மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதற்குண்டான பதிலைச் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சார்பில் சல்மன் குர்ஷித் அளித்தார். அவர் அளித்த தரவுகளின் படி தமிழ்நாட்டில் மட்டும் தேர்தல் காலத்தில் பறிமுதலான மொத்த தொகை ரூ 36,54,48,569 ஆகும். இது பிறமாநிலங்களை விட அதிகமாகும். புதுச்சேரியில் ரூ. 11,67.265 தான் பறிமுதலானது. அண்டை மாநிலம் கேரளாவில் ரூ.1,14,03,620 பிடிபட்டது.
ஆத்தாடி இத்தனை கோடியா?
ஆக, பட்டியலில் உள்ள பிற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் தேர்தல் காலத்தில் அதிகமான தொகை பறிமுதலாகிறது என அறிகிறோம். இந்த ஒட்டுமொத்த மாநிலங்களில் பிடிபட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 21,62,54,842 ஆகும். திரும்ப ஒப்படைக்கப்பட்ட தொகை ரூ. 2,52,96,080 ஆகும். உலோக பொருட்களின் மதிப்பு ரூ. 14,04,87,834 ஆகும்.
இந்தக் கணக்கைப் படிக்கும் போதே பலருக்கும் தலைச் சுற்றலாம். அன்றாடம் காய்ச்சிகளாக மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழாகத் தவிக்கும் நாட்டில்தான் இப்படி ஜனநாயக திருவிழாக் காலங்களில் பணம் வெள்ளமாகப் பாய்கிறது.
தேர்தல் காலங்களில் பறிமுதல் செய்யப்படும் பணம் அனைத்தும் முறைகேடானதா?
இல்லை. அனுமதித்துள்ள வரம்பை மீறி ஒருவர் பணமோ பொருளோ கொண்டு செல்லும் போது அதை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றன. அதற்கான முறையான ஆவணம் உடன் இருந்தால் அதைப் பறிமுதல் செய்யமாட்டார்கள். அது எப்படி?
நீங்கள் கொண்டுசெல்லும் பணம் முறையாக வங்கியிருந்து பெறப்பட்டதாக இருந்தால் அந்த பாஸ் புக்கை காட்டலாம். அதில் பணம் எடுக்கப்பட்ட தேதியுடன் தொகையின் அளவு பொருந்திப் போனால் அதிகாரிகள் பணத்தில் கைவைக்கமாட்டார்கள். அதேபோல் நகையாக இருந்தால் அதற்கான ரசீது வேண்டும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிக்கு எடுத்துச் செல்லும் பொருட்களாக இருந்தால், அதற்கான திருமண அழைப்பிதழை ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம். மருத்துவச் செலவுக்காகக் கொண்டு செல்லும் பணமாக இருந்தால், மருத்துவமனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம்.
சரி பணம் எப்படிக் கிடைக்கும்?
பிடிபடும் நேரத்தில் உரிய ஆவணம் இல்லை எனில் அதிகாரிகள் முன்பே சொன்னதைப் போல் பறிமுதல் சான்றிதழ் அளிப்பார்கள். அதில் உங்களிடம் பெறப்பட்ட பொருள் அல்லது பணம் முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக எனச் சோதித்துக் கொள்ளவேண்டும். பின்ன அதிகாரிகள் அதனை அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்துவிடுவர். அங்குச் சென்று ஆவணங்களைக் காட்டி பெற்றுக் கொள்ளலாம்.
அதிகாரிகளுக்கு ஆவணங்களின் மீது நம்பிக்கை இல்லை எனில் அதாவது, ரூ.10 லட்சத்திற்கான விவகாரமாக இருந்தால் வருமானவரித்துறை மூலம் விசாரணை செய்த பின்பே திரும்ப அளிக்கப்படும். பணம் அல்லது பொருட்கள் பிடிபட்ட பகுதியைச் சோதிப்பார்கள். அங்கே அரசியல் கட்சியுடன் தொடர்பு உள்ளதா எனப் பார்ப்பார்கள், இலவசப் பொருள் வழங்கும் முயற்சிகள் நடந்துள்ளதா? என ஆராய்வார்கள். அதில் சந்தேகம் இல்லை, அது வியாபார ரீதியானதுதான் என உறுதி செய்யப்பட்டால் உடனடியாக திரும்ப அளித்துவிடுவார்கள்.
இலவச ஹெல்ப் லைன் வசதி
சந்தேகம் அதிகரித்தால், பணத்தை நீதிமன்றம் மூலமே மீட்க முடியும். அதற்கு உரியச் சட்ட ஆலோசனையை நீங்கள் பெறலாம். ஒருவேளை அதிகாரிகளே சிலர் தவறாக நடந்துகொள்கிறார்கள் என நீங்கள் சந்தேகப்பட்டால், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்குப் புகாரளிக்கலாம். அதற்கான 24 மணி நேரமும் இயங்கும் ஹெல் லைன் 1800 425 7012 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இதற்காக 40 பேர் கொண்ட குழு சமூக இணைய வழி மற்றும் சமூக ஊடகங்கள் வழியே மிகத் தீவிரமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் 48 பறக்கும் படைகள் 8 மணிநேர சுழற்றி முறையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இது அல்லாமல் cVigil App உள்ளதாகவும் அதிலும் புகார் பெறப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆக, தேர்தல் காலங்களில் பிடிபடும் பணம் அனைத்தும் தவறான முறையில் புழங்குபவை என மக்கள் நம்பிவிட வேண்டாம். அதில் வியாபாரிகள், சில்லறை வணிகர்கள், பொதுமக்கள் எனப் பலரது பணமும் கலந்துள்ளது. முறையான ஆவணம் இருந்தால் திரும்பக் கட்டாயம் கிடைக்கும்.
ஒருவேளை உரிமை கோராத பணத்தை என்ன செய்வார்கள்? எங்கே பிடிபட்டதோ அங்கே உள்ள அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களை வழக்கில் இணைப்பார்கள். விசாரணைக்கு உத்தரவிடுவார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை உறுதியாகும்.
- கடற்கரய்












Click it and Unblock the Notifications