உங்க பெயரில் எத்தனை செல்போன் நம்பர்? கண்டுபிடிப்பது ரொம்ப ஈசி தான் மக்களே! 10 இருந்தா ரொம்பா ஆபத்து!
சென்னை: உங்களது பெயரில் 9 செல்போன் நம்பர்கள் வரை இருக்கலாம் எனவும், அதற்கு மேல் அதாவது 10 எண்களுக்கு மேல் இருந்தால் அபராதமும் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் உங்கள் பெயரில் வேறு யாராவது சிம்கார்டை பயன்படுத்துகிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். ஒருவேளை அப்படி இருந்தால் எத்தனை நம்பர்கள் இயங்குகிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என்பது குறித்து பார்க்கலாம்..
நவீன செல்போன் யுகம் தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் செல்போன் இல்லாத நபர்களை பார்ப்பதே அரிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்கு குறைந்தது 5 செல்ஃபோன்களாவது இருக்கிறது.

மேலும் சிறுவர்கள் கூட கையில் செல்ஃபோனை வைத்துக் கொண்டு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பிஸியாகவே இருக்கிறார்கள். செல்ஃபோன்கள் சிம்கார்டு இன்றி இயங்க முடியாது. சிம் கார்டில் உங்களுக்கு வழங்கப்படும் எண் உங்களுக்கு மட்டுமானதாகவே இருக்கும்/ அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
முதலில் சாதாரண ஐடி கார்டை வைத்துக் கூட சிம்கார்டுகளை வாங்க முடியும். ஆனால் தற்போது ஆதார் அவசியமாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தெரியாமல் சிலர் ஆதார் புகைப்படம் உள்ளிட்டவற்றை தவற விடும்போது கூட அவற்றை வைத்து செல்போன் எண்கள் வாங்கி அதன் மூலம் மோசடிகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதாவது ஒரே நபரின் பெயரில் 10 சிம் கார்டுகள் இருந்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமலாக்கப்பட்டு இருக்கிறது. குற்றம் முதன்முறையாக கண்டறியப்பட்டால் 50,000 ரூபாய் அபராதமும், அதன் பிறகும் தொடர்ந்தால் அதிகபட்சம் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என செய்திகள் வந்திருக்கிறது. இதனால் பலரும் தங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டுகள் இருக்கிறது என்று குழம்பும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
ஆனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை உங்கள் பெயரில் இருக்கும் சிம்கார்டுகளை எளிதாக கண்டறிய மத்திய அரசே ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற தளத்திற்குச் சென்றால், உங்கள் பெயரில் எத்தனை செல்ஃபோன் எண்கள் உள்ளது என்பதை பார்க்க முடியும்.

இந்த இணையதளத்தை திறந்ததும் முதலில் உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை கேட்கும். அந்த மொபைல் எண்ணை கொடுத்து சரிபார்ப்பு சோதனையை செய்தவுடன், உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும்.
அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டவுடன் நேரடியாக அந்த இணையதளத்திற்குள் நீங்கள் செல்லலாம். அப்போது உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கிறது என்ற பட்டியல் காட்டப்படும்.

அதில் ஏதாவது ஒரு எண் உங்கள் எண் இல்லை என்றால், நீங்கள் அதனை உடனடியாக 'நாட் மை நம்பர்' என செலக்ட் செய்து ரிப்போர்ட் கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்போது உடனடியாக உங்கள் பெயரில் இருந்தும் நீங்கள் உபயோகிக்காத அல்லது சட்ட விரோதமாக பெறப்பட்ட மொபைல் எண்களை உடனடியாக நீக்க முடியும். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் வெப்சைட் என்பதால் நீங்கள் பயமின்றி பயன்படுத்தலாம்.. உங்கள் நண்பர்களுக்கும் நம்பி இதனை பரிந்துரைக்கலாம்..












Click it and Unblock the Notifications