நீங்க ஓய்வு பெற்ற பிறகும்.. மாதாமாதம் வங்கி கணக்கில் வந்து விழும் ஒரு லட்ச ரூபாய்! சீக்ரெட் இதுதான்
சென்னை: இந்தக் காலத்தில் நாம் 30- 35 வயதிலேயே ஓய்வு குறித்துச் சேமிக்க வேண்டி இருக்கிறது. ஓய்வுக் காலத்தில் யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்றால் இப்போதே அதற்கான பணத்தைச் சேமிக்க வேண்டி இருக்கிறது. அப்படி ஓய்வு பெற்ற பிறகும் கூட மாதாமாதம் உங்களுக்கு ரூ.1 லட்சம் வருமானம் வேண்டுமா? அதற்கு நீங்கள் எவ்வளவு சேமிக்க வேண்டும்.. அதை எப்படிச் சேமிக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முன்பெல்லாம் பொதுமக்கள் பெரும்பாலும் ஓய்வுக் காலம் குறித்தோ அல்லது அப்போது தேவைப்படும் பணம் குறித்தோ பெரிதாக சிந்திக்க மாட்டார்கள்.. ஆனால், இப்போது மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் அதிகரிக்கும் செலவுகள் காரணமாக 30- 35 வயதானாலே ஓய்வுக் காலம் குறித்து நாம் சிந்தித்து, அதற்கேற்ப பிளான் செய்ய வேண்டி இருக்கிறது.

ஓய்வுக்காலம்
ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க, சரியான திட்டமிடலும் சேமிப்பில் சுய ஒழுக்கமும் அவசியம். ஓய்வுக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வருமானம் என்பது கனவு எல்லாம் இல்லை.. சரியாகத் திட்டமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் அது எளிதாகச் சாத்தியம் தான். தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, சரியான நேரத்தில் திட்டமிட்டு முதலீடு செய்தாலே போதும்.. இந்த இலக்கை அடைய முடியும்.
மாதம் ஒரு லட்ச ரூபாய்
பணி ஓய்வுக்குப் பிறகு பெரிதாக எங்கும் வெளியே செல்ல மாட்டோம், ஒரு லட்ச ரூபாய் தேவையா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், உண்மையில் இன்றைய ஒரு லட்சம் ரூபாயின் மதிப்பு, 20 முதல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெகுவாகக் குறையும். காரணம் பணவீக்கம் தான். எனவே, அதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இன்று இளைஞர்களாக இருப்போர் ஓய்வுக்காலத்தில் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வருமானம் வருவதுபோல திட்டமிடுவதே சரியாக இருக்கும்.
உதாரணமாக, உங்கள் மாதச் செலவு இன்று ரூ.1 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறத் திட்டமிட்டால், ஆண்டுக்கு 6% பணவீக்கத்தை வைத்துக் கணக்கிட்டாலே, வாழ்க்கை முறையில் எந்தவொரு சமரசமும் செய்யாமல் இருக்க மாதத்திற்குச் சுமார் ரூ. 3.2 லட்சம் தேவைப்படும்.
எவ்வளவு தொகை வேண்டும்
அதேபோல் இப்போது உங்கள் செலவு ரூ.30,000ஆக இருந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மாதத்திற்கு உங்களுக்குச் சுமார் ரூ. 1 லட்சம் தேவைப்படும். பணவீக்கம் மட்டுமின்றி கடைசிக் காலம் வரை யாரையும் நம்பி இருக்கக்கூடாது என்றால்.. சராசரியாக 85 வயது வரை தேவைப்படும் பணத்தை வைத்து உங்கள் ஓய்வுக்கால நிதிக்குத் திட்டமிடுவது நல்லது.
அதன்படி நீங்கள் 60 வயதில் ஓய்வுபெற்று, அடுத்த 25 ஆண்டுகளுக்கு (85 வயது வரை) உங்கள் மாத வருமானம் ரூ.1 லட்சம் அல்லது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் வேண்டும் என்றால் நீங்கள் எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் தெரியுமா.. சுமார் ரூ.2.5 கோடி தேவைப்படும். இந்தத் தொகை, 25 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வருமானத்தை உங்களுக்கு வழங்கும்.
செய்ய வேண்டியது என்ன!
அம்மாடி ரூ.2.5 கோடியா இதெல்லாம் சாத்தியமா என நீங்கள் கேட்கலாம்.. சாத்தியம் தான்! சில அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்தாலே போதும்.. முதலில் எவ்வளவு சீக்கிரம் சேமிப்பைத் தொடங்குகிறீர்களோ அவ்வளவு நல்லது.. மேலும், சமரசம் இல்லாமல் சீராக முதலீடு செய்ய வேண்டும். இதுபோல நீண்ட காலம் சீராக முதலீடு செய்தால் தான் compounding உங்கள் பணம் மேலும் மேலும் அதிகரிக்கும்.
இதற்கு நீங்கள் பங்குகள், கடன்பத்திரங்களில் முதலீடு செய்யலாம். மேலும், பணவீக்கத்தில் இருந்து சேமிப்பைப் பாதுகாக்கச் சேமிப்பின் ஒரு பகுதியைத் தங்கத்தில் கூட முதலீடு செய்யலாம்.. ஓய்வுக்காலத்திற்குத் தேவையான ரூ.2.5 கோடி பணத்தைச் சேமிக்க ஷாட்கட் அல்லது சீக்ரெட் வழி எல்லாம் எதுவும் இல்லை. ஒழுக்கமும் சீரான சேமிப்பும் தான் அந்த இலக்கை நம்மை அடைய வைக்கும். எனவே, அதை மட்டும் செய்தாலே போதும் கடைசி யாரையும் நம்பி இருக்கத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications