மின்சார மானியம் பெறுபவரா நீங்கள்? மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது சுலபம்.. இதோ வழிமுறை!
சென்னை: மின்சார முறைகேட்டை தடுக்க மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இதற்கான லிங்க் நேற்று முன்தினம் (நவ.17) வெளியானது.
ஆனால் இதில் எப்படி தங்களது ஆதார் எண்ணை இணைப்பது என்பது குறித்த குழப்பம் பலருக்கு நீடித்து வருகிறது. அதேபோல யாரெல்லாம் இணைப்பது என்பது குறித்தும் சந்தேகம் இருந்து வருகிறது.
தற்போது இது தொடர்பாக விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம்.

யாரெல்லாம் இணைக்க வேண்டும்?
அதாவது, குடிசை வீட்டில் வசிப்பவர்கள், 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர், 200 யூனில் இலவச மின்சாரம் பெறும் கைத்தறி நுகர்வோர் என இலவச மின்சாரம் மற்றும் மின்சார மானியம் பெறுபவரகள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை கொண்டிருப்பதாகவும், இதனால் மின்சார முறைகேடு நடைபெறுவதாகவும் வந்த புகார்களையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வேளை இவ்வாறு இணைக்க தவறினால் மின் இணைப்பு 'துண்டிக்கப்படாது' என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

எப்படி இணைப்பது?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் https://www.tangedco.gov.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்றால், வலது புறத்தில் 'Link Your Service connection number with Aadhar' என்கிற ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அங்கு உங்கள் மின் இணைப்பு எண்ணை கேட்கும். இதில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தவுடன் ஆதார் அட்டையின் நகலை கேட்கும். இந்த ஃபைல் .jpg/.jpeg பார்மெட்டில் இருக்க வேண்டும். பின்னர் இந்த நகலை இணைத்து விட்டு அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதனையடுத்து OTP வரும். அதை கொண்டு சரியான மின் இணைப்பாளர் தாங்கள்தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வளவுதான் இப்போது மின் இணைப்பு எண்ணுடன் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது.

ஏன் இணைக்க வேண்டும்?
இது தவிர மின் கட்டணம் செலுத்தும் போதும் இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு இணைப்பதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை. இவ்வாறு இணைக்கப்பட்ட ஆதார் எண்ணில் மூன்று முதல் ஐந்து வீடுகளில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட பிரச்னை கிடையாது. இது மின் பயன்பாட்டை கணக்கிடவேதான் என்பதால் இது குறித்த வீண் அச்சம் வேண்டாம் என்றும் மின்சார வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் 27 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

மானியம் பெறாதவர்களின் நிலை
இவ்வாறு இருக்கையில் பல இடங்களில் மின்சாரம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் குவிந்துள்ளதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்குறிப்பிட்ட நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். இதில் மானியம் பெறாதவர்கள், நிறுவனங்கள் ஆகியோர் ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தற்போது வரை தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டத்தில் இயங்கி வருவதால் இதனை சரிகட்ட இம்மாதிரியான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வாரியம் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications