சட்லஜ் நதியில் பாறை இடுக்கில் சிக்கிய வெற்றி துரைசாமி உடல்.. 9 நாள் போராட்டம்.. இதுவரை நடந்தது என்ன?
சென்னை: சட்லஜ் நதியில் கார் விழுந்து விபத்திற்குள்ளானதில் மாயமான வெற்றி துரைசாமியின் உடல் 9வது நாளான இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 9 நாட்களாக நடந்த தீவிர தேடுதல் பணியில் இதுவரை நடந்தது என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக நிர்வாகியுமான சைதை துரைசாமி, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் ஒன்றை 'மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி’ என்ற பெயரில் நடத்தி வருகிறார். சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (வயது 45), இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அகாடமி மூலம், இலவசமாக ஏழை எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக உதவியுள்ளார் வெற்றி துரைசாமி.

மேலும், சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட வெற்றி துரைசாமி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். 'என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள வெற்றி, திரில்லர் ஜானரில் படம் ஒன்றை இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதற்காக படப்பிடிப்பு தளங்களை பார்வையிடுவதற்காக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவிற்கு அவர் சென்றிருந்தார்.
பிப்ரவரி 4: இமாச்சல பிரதேச மாநிலத்தில் வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு, வெற்றி துரைசாமி, அவரது உதவியாளர் கோபிநாத் ஆகியோர் பல்வேறு இடங்களுக்குச் சென்றனர். பின்னர் சென்னை திரும்புவதற்காக சிம்லாவிற்கு சென்று கொண்டு இருந்தனர். காரை ஓட்டிச் சென்ற சிம்லாவை சேர்ந்த டென்சின் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கார், கசாங் நலா என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் விழுந்து விபத்திற்கு உள்ளானது.
பிப்ரவரி 5: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை கயிறு கட்டி இழுத்து மீட்டனர். அப்போது டிரைவர் டென்சின் சடலமாக காருக்குள் கிடந்தது தெரியவந்தது. ஆற்றில் விழுந்த கோபிநாத் சிறிது தூரத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் இந்த காரில் பயணித்த வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
பிப்ரவரி 6: விபத்து நடந்து, கார் கிடந்த பகுதியில் வெற்றி துரைசாமி கிடைக்காத நிலையில் போலீசார், ராணுவம், விமானப்படை மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் உட்பட ஏராளமானோர் அப்பகுதியில் தீவிரமாக தேடினர். எனினும் வெற்றி துரைசாமியை பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மகனின் நிலையை அறிய இமாச்சலுக்கு சைதை துரைசாமி விரைந்தார்.
ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் தீவிரமாக நடந்த நிலையில் சில இடங்களில் பனி மூட்டம் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் நிலவியது. எனவே மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
பிப்ரவரி 6: இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று அவரது தந்தை சைதை துரைசாமி அறிவித்தார். சட்லஜ் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பிப்ரவரி 6: மாயமான வெற்றியை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்திய கடற்படையின் உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியது. இதையடுத்து சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்தனர். கார் விழுந்த இடத்திலிருந்து 15 கி.மீ சுற்றளவில் வெற்றியை தேடும் பணியை கடற்படை வீரர்கள் தொடங்கினர்.
பிப்ரவரி 7: சட்லஜ் ஆற்றங்கரையில் பாறைகளுக்கு இடையே இருந்து மனித உடல் பகுதி மீட்டெடுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். மூளைப் பகுதி உள்ளிட்ட உடல் பாகங்கள் கிடைத்ததாகவும், அவை வெற்றி துரைசாமியுடையதா என்பதை கண்டறிவதற்காக டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
பிப்ரவரி 7: சட்லஜ் நதியில் கவிழ்ந்த காருக்குள் இருந்து வெற்றியின் ஐஃபோன் கண்டுபிடிக்கப்பட்டது.
பிப்ரவரி 7: விபத்தில் சிக்குவதற்கு முன்பாக வெற்றி துரைசாமி உணவகம் ஒன்றிற்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. உணவகத்தில் இருந்து விபத்து எற்பட்ட இனோவா காரில் தனது உதவியாளருடன் வெற்றி துரைசாமி ஏறிச்செல்லும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
பிப்ரவரி 8: வெற்றி துரைசாமியின் உடைகள் சட்லஜ் நதியில் கிடைத்தன. அவருடைய சூட்கேஸ், உடமைகளும் அங்கு கண்டெடுக்கப்பட்டன.
பிப்ரவரி 9: வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக இமாச்சல் காவல்துறை சார்பில் தமிழ்நாடு காவல்துறை கடிதம் எழுதப்பட்டது. அதில், காணாமல் போன வெற்றியின் டிஎன்ஏ-வை உறுதிப்படுத்த அவரது தந்தை சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிப்ரவரி 10: 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வெற்றி துரைசாமியின் எடை, அவரது உயரத்திற்கு ஒப்பான பொம்மை ஒன்றை செய்து, சட்லஜ் நதியில் மிதக்க விட்டு அது செல்லும் திசையை வைத்து தேடினர்.
பிப்ரவரி 11: சட்லஜ் ஆற்றுப் பாறையில் இருந்த மனித மூளை பகுதி, யாருடையது என்று இன்று கண்டறிவதற்கான டிஎனே பரிசோதனை ரிசல்ட் பெறப்பட்டது.
பிப்ரவரி 11: சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இமாச்சல் தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஷாக்! கார் விபத்தால் சட்லஜ் நதியில் மாயமான.. சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு
பிப்ரவரி 12: கடந்த 8 நாட்களுக்கும் மேலாக தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில், இன்று 9வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்தது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெற்றி துரைசாமியின் உடல், பாறை இடுக்குகளில் இருந்தது தெரியவந்ததை அடுத்து, அதனை அவர்கள் மீட்டுள்ளனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக வெற்றி துரைசாமியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் சைதை துரைசாமி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு சென்னை கொண்டு வரப்பட உள்ளது. 9 நாட்கள் நடைபெற்ற தேடுதல் வேட்டையின் முடிவில் வெற்றி துரைசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளது, அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications