ஷாக்! கார் விபத்தால் சட்லஜ் நதியில் மாயமான.. சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு
டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடல் பல நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் சைதை துரைசாமி. சென்னை முன்னாள் மேயரான இவர், சைதாப்பேட்டை எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். இவருக்கு வெற்றி என்ற மகன் உள்ளார். இம்மாத தொடக்கத்தில் இவர் இமாசல பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

வெற்றி துரைசாமி உடன் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் உடன் சென்றுள்ளார். அங்கே இவர்கள் இருவரும் காசாங் நாலா என்ற பகுதிக்குத் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டு இருந்தனர்.
விபத்து: கடந்த பிப். 4ஆம் தேதி அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை ஓட்டுநர் டென்சின் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது அவர்கள் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தத கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநருக்கு அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதே இந்த விபத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த விபத்தால் அவர்கள் பயணித்த கார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த சட்லஜ் ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் அம்மாநில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக காரை போலீசார் கயிறு கட்டி மீட்டுள்ளனர். உள்ளே ஓட்டுநர் டென்சின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாயமான இருவரையும் போலீசார் தேடிய நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் கோபிநாத் ஆற்றங்கரை அருகே உயிருடன் மீட்கப்பட்டார். இருப்பினும், அவருக்குப் படுகாயம் ஏற்பட்ட நிலையில், அவர் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வெற்றி துரைசாமி: இருப்பினும், வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. வெற்றி துரைசாமி தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சைதை துரைசாமியும் உடனடியாக இமாச்சல பிரதேசத்திற்குச் சென்றார். ஆற்றின் கரை அருகே வசிக்கும் கிராமத்தின் யாராவது வெற்றி துரைசாமியைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் சைதை துரைசாமி சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், வெற்றிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுத் தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இருப்பினும், அதில் பலன் கிடைக்கவில்லை. ஆற்றிலிருந்து வெற்றியின் ஐபோன், சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு மூளை திசு கிடைத்துள்ளது. அது யாருடையது என்பதைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
உடல் கண்டெடுப்பு: இருப்பினும், வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. இதற்கிடையே விபத்து நடந்து சுமார் 8 நாட்களுக்குப் பிறகு கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமி மகன் உடல் மீட்கப்பட்டுள்ளது. சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் இப்போது மீட்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 3 முதல் 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கே ஆற்றின் நடுவே பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த உடலை மீட்புப் படையினர் மீட்டனர். இதையடுத்து உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அருகே உள்ள ரெகாங்புவா மருத்துவமனைக்கு மீட்புப் படையினர் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications