4430 கோவில் குடமுழுக்குகள்! 8000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு! அறநிலையத்துறையின் சாதனைகள்!
சென்னை: தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று திமுக தொடர்ந்து பேசி வருகிறது. குறிப்பாக தொழில்துறையிலும், கல்வித் துறையிலும் பிற மாநிலங்களைவிட வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல கடந்த ஐந்து ஆண்டுகளில் அறநிலையத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்திருப்பதாகக் கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுக ஆட்சிகாலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பல பழமையான கோவில்களைப் பராமரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் பல மாற்றங்களைச் செய்தது அறநிலையத்துறை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 4,430 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. சுமார் 8,100 கோடி ரூபாய் மதிப்பில் 29,400 க்கும் மேற்பட்ட கோவில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 352 பழமையான கோவில்களை அவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க 560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன என்கின்றனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

மேலும் 8,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 8,455 கோடி ரூபாய் இருக்கும். மொத்தம் 2.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் நில அளவை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதெல்லாம் கடந்த ஆட்சியில் நடக்கவில்லை என்கின்றனர்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆகும் திட்டத்தின் கீழ் 94 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை 29 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். முதன்முறையாக 12 பெண்கள் உட்பட 46 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

தமிழ்நாட்டில் சுமார் 764 கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் அவற்றில் 13 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழில் வழிபாடு செய்யும் முறை 294 கோவில்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை அனைத்துக் கோவில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் பரவலாக எழுவதைப் பார்க்கமுடிகிறது.
அர்ச்சகர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு 5,000 ரூபாய் ஓய்வூதியம், கிராமப்புற, ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்ள 10,000 கோவில்களின் பணிகளுக்கு நிதி உதவி என அறநிலையத் துறையின் திட்டங்கள் கோவில் பணியாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவில் மறுசீரமைப்பு நிதி ஆண்டுக்கு 25 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். கிராம தேவதைக் கோவில்களைப் புதுப்பிக்கவும், பழமையான கோவில்களைப் பாதுகாக்கவும் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறது திமுக.
அன்னதானத் திட்டம் மேலும் 50 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். தியான மண்டபங்கள், நவீன சுகாதார வசதிகள், மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு தனி வரிசை வசதி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் வரவேற்பைப் பெற்றுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய 5,000 இணையர்களுக்கு கோவில்கள் மூலம் சீர்வரிசையுடன் திருமணங்கள் நடத்தித் தரும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் இந்து விரோத திமுக என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தமிழ்நாட்டின் கோவில்களைக் காப்போம் என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
கடந்த ஐந்தாண்டுகால திட்டங்களும் வாக்குறுதிகளும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. திமுகவின் செயல்பாடுகள் தீவிர பக்தர்கள் பலரைத் ஆதரவாகத் திருப்பியிருக்கிறது, இது திமுகவின் வெற்றிக்கு கணிசமாக உதவும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications