இன்றிரவு கோயில்களில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி உண்டா? அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், புத்தாண்டு இரவில் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் குறைந்து வந்த கொரோனா, கடந்த சில நாட்களாகவே மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா பாதிப்பு
சென்னையில் 397 பேர் உட்பட தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 890 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே புத்தாண்டு இரவில் கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஞ்சிபுரம் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள மாவட்டம். இங்குக் கோயில்களுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த ஏதுவாக கோயில்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும். பக்தர்கள் தங்க முந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் சரியாக இல்லை. புதிய கட்டிடத்திலேயே பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

திருப்பணிகள்
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் மாநிலத்தில் உள்ள 551 கோயில்களில் திருப்பணி தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் முடியாமல் இருக்கிறது. இது தொடர்பாக விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். திருப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, அடுத்தாண்டு பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். கோயில்கள் ஆக்கிரமிப்பு இடங்களை மீண்டும் கையகப்படுத்தி வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இது சிறப்பான ஒரு திட்டமாகும்.

கோயில்கள்
புத்தாண்டு இரவில் கோயில்கள் திறக்க தடையில்லை. எந்தெந்த கோயில்கள் இரவு நேரத்தில் திறக்கப்படுமோ அந்தக் கோயில்கள் வழக்கம் போலத் திறக்கப்படும். அதற்குத் தடை எதுவும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் கோயில்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் மாஸ்க் அணிந்து மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும். சரியாக 12 மணிக்குத் தான் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என இல்லை. மக்கள் கூட்டம் குறைவான நேரத்தில் கோவில்களுக்குச் செல்லலாம்.

ஆன்மிகவாதிகள் மகிழ்ச்சி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 5 ஆண்டுகள் மேலாகக் கோயில்களில் பணிபுரிவோருக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்படும். இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். ஆன்மிகவாதிகள் மகிழ்ச்சியுடனும் மலர்ச்சியுடனும் இருக்கத் திராவிட அரசு என்றென்றும் துணை இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications