அடிதூள்.. ஒரே ஒரு அறிவிப்பில் "அப்ளாஸ்" வாங்கும் திமுக அரசு.. முன்னாடியே இதை செய்திருக்கலாமே.. சபாஷ்
சென்னை: ஒரே ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதிருப்திகளை முறியடித்து, ஒட்டுமொத்த பாராட்டுக்களையும் அள்ளி கொண்டிருக்கிறது திமுக அரசு.. அப்படி என்ன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அழுத்தமாக தெரிவித்திருந்தன.
அதிருப்தி: ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான், மரக்காணம் கள்ளச்சாராய உயிர்பலிகள் ஏற்பட்டு, திமுக அரசின் மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்தது.. உயிர்பலிகளுக்கு பிறகு, "பூரண மதுவிலக்கு தேவை" என்று வைகோ, திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களே வலியுறுத்த துவங்கிவிட்டனர்.. போதாக்குறைக்கு செந்தில் பாலாஜியின் "10 ரூபாய்" விமர்சனம் திமுக ஆட்சி மீதான விமர்சனத்தை அதிகரித்துவிட்டது.
வாபஸ் அறிவிப்பு: இதற்கு நடுவில், 'சிறப்பு உரிமம் பெற்று திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்தலாம் என்று திமுக அரசு அறிவிப்பை வெளியிட, அதற்கு நாலாபுறமுமிருந்து எதிர்ப்புகள் கிளம்ப, சூட்டோடு சூடாக அந்த அறிவிப்பை அரசு திரும்ப பெற்றது வேறு விஷயம்.
எனினும், கடந்த மாதம், அமைச்சர் முத்துசாமி பேசியிருந்தது அதிருப்தியை மீண்டும் தந்துவிட்டது.. "காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்லாதீர்கள்.. எனக்கு கோவம் வரும்.. குடிப்பவர்களை விமர்சிப்பதற்கு பதில், அவர்களுக்கு ஆலோசனை சொல்லுங்கள்.. கடுமையான பணிச்சூழலில் இருப்பவர்கள் குடிக்கும்போது, அவர்களை குடிக்காரர்கள் என்று விமர்சிக்காதீர்கள்.. ஜாலியாக குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதில் தவறில்லை" என்று முத்துசாமி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அன்புமணி: குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதை பற்றி கூறும்போது, "மதுவிலக்குத் துறை என்றால், எப்படியாவது மதுவின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதாகும். மக்கள் மத்தியில் மது பயன்பாட்டைக் குறைக்கும் வகையில்தான் மதுவிலக்குத் துறை செயல்பட வேண்டும். ஆனால், இது மது விற்பனைத் துறை என்று நினைத்துக் கொண்டுதான், அந்த துறைக்கு அமைச்சராக வருகிறார்கள் போல என்று எண்ணத் தோன்றுகிறது.
சமூக அக்கறை கொண்ட ஒருவர் மதுவிலக்குத் துறைக்கு பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால், அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு பேசுவதைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்று அன்புமணி ராமதாஸ் அச்சம் தெரிவித்திருந்ததை இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.
மா.சுப்பிரமணியன்: இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரே அறிவிப்பின் மூலம், திமுக மீதான அதிருப்தியை போக்கியுள்ளார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் மீட்கும் வகையில், தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமம், கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை, டிடிகே. மருத்துவமனை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து "நட்புடன் உங்களோடு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு" என்ற முகாமை சென்னை கண்ணகி நகரில் செயல்படுத்தி இருக்கிறது.
சூப்பர் அறிவிப்பு: இந்த முகாமுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.. அப்போது அமைச்சர் பேசியபோது, "இந்த முகாமில் கலந்து கொண்டவர்களில் குடி மற்றும் போதை பழக்க பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் முறையிலும், மனோதத்துவ முறையிலும், மருத்துவ முறை சிகிச்சையுடன் கூடிய மறுவாழ்வு சேவைகள் அளிக்கப்படும்.
அது மட்டுமில்லாமல், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு 15 நாட்கள் அவர்கள் பகுதியிலேயே தங்கி இருந்து சிகிச்சை வழங்கப்படும். குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட பிறகு வேலைக்கான தகுதி இருந்தால், அரசு பணியில் கல்வி தகுதிக்கு ஏற்ப அவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள்" என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications