கமல் தவிர ஒருத்தருக்கும் கிடையாது.. கட் அண்ட் ரைட்டாக திமுக.. அதிர்ந்த கூட்டணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகள் குறித்து முடிவு செய்ய திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேகம் வேகமாக பேச்சுவார்த்தைக் குழுக்களை அமைத்தன.
ஆனால், முதல் ஓரிரு நாள் இந்த குழுக்களின் பரபரப்பு இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரபரப்பின்றி இருக்கிறது. கடை விரித்தேன் ; கொள்வார் இல்லை என்கிற நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளதாம். கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அந்த கட்சி கடுமையாக கஷ்டப்பட்டு வருகிறது.

பாமக, தேமுதிக இந்த கூட்டணிக்கு வருமா என்று தெரியவில்லை. இதனால் அதிமுக தரப்பும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சொதப்பி வருகிறதாம்.
திமுக இழுபறி: இன்னொரு பக்கம் கூட்டணி வலுவாக உள்ள திமுகவிலும் கூட தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படாமல் இழுபறியிலேயே இருந்து வருகிறது. எந்த கட்சிக்கு எத்தனை இடங்களை கொடுப்பது என்று தெரியாமல் திமுக உள்ளதாம். இதற்கு காரணம் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக குறைப்பது, கூடுதல் சீட் கேட்டு கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துவது, ஒரே தொகுதியை பல கட்சிகள் விரும்புவது , குறிப்பிட்ட நபர்களுக்காக பல தொகுதிகளை ரிசர்வ் செய்து வைத்திருக்கும் திமுகவின் தொகுதிகளை கூட்டணி கட்சிகள் குறி வைப்பது, ராஜ்யசபா சீட் கேட்டு அடம் பிடிப்பது என்கிற பல்வேறு காரணிகளால் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் அறிவாலயத்தார்.
லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்ய சபா சீட்: கூட்டணி கட்சிகள் எல்லோருமே, ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை கேட்டு செம காட்டமாகிறது திமுகவின் பேச்சுவார்த்தை குழு. குழுவில் உள்ள சீனியர்கள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ராஜ்யசபா சீட் என்ன கடையில் விற்கிற தேங்காயா ? கேட்டதும் தூக்கிக் கொடுப்பதற்கு ? இந்த முறை கூட்டணி கட்சிகளில் யாருக்கும் ராஜ்யசபா சீட் கிடையாது என தெளிவாக அக்கட்சிக ளின் தலைவர்களிடம் தெரிவித்து விடுங்கள்.
அதிமுக ஆஃப்ஷன் எங்களுக்கு இருக்கிறது என்கிற மாயைக் காட்டித்தான் நம்மை கூட்டணி கட்சிகள் மிரட்டி பார்க்கின்றன. இதற்கு நாம் அசைந்து கொடுக்கக்கூடாது என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, திமுகவில் விருப்ப மனுக்கள் மார்ச் 1- ந்தேதி முதல் வாங்குவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி இறுதி : அதற்குள் கூட்டணி கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை திமுகவிடம் இறுதி செய்து கொள்ள வேண்டும் ; இழுபறி நீடித்தால் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இவைகள் தான் ; ஏற்பதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம் என்கிற பாணியில் சொல்லிவிட்டு, தேர்தல் பணிகளில் வேகம் காட்ட திட்டமிட்டிருக்கிறது. ஒருவேளை திமுக தரும் தொகுதிகளை ஏற்க கூட்டணி கட்சிகள் மறுத்தால், 40 தொகுதிகளிலும் ( கமல் இதில் விதிவிலக்கு ) போட்டியிடவும் திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications