"டார்கெட்" இதுதான்.. ரெடியாகும் எடப்பாடி பழனிசாமி.. திமுகவை முந்துமா அதிமுக? மா.செ.க்கள் அலர்ட்..!
சென்னை: அதிமுகவில் நாளை முதல் உறுப்பினர் சேர்க்கை துவங்குகிறது.. ரூ.10 கட்டணம் செலுத்தி உறுப்பினராகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பரபரப்பாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்...
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் கையெழுத்து
அப்போது, அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் அறிவிப்பாக வெளியிட்டிருந்தார்.. அத்துடன், அதிமுக தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.. ஆனால், இதை அதிமுகவின் மூத்த தலைவரான கேசி பழனிசாமி விமர்சித்திருந்தார்.. "இந்த பதவியேற்பு அதிமுகவில் எம்ஜிஆர் சட்டவிதிகளுக்கு முரணானது. நாங்கள் எங்கள் கட்சியின் விதிகளை சொல்கிறோம். உறுப்பினர்களை சேர்க்காமலேயே தேர்தலை நடத்தி முடித்துள்ளார் எடப்பாடி.. இதை அவரே வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டுள்ளார். இதுவே அவருக்கு மைனஸ்தான்" என்று விமர்சித்திருந்தார்.

SDS - அட்வைஸ்
இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்டி சோமசுந்தரம் நூற்றாண்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது, "கட்சியில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தபோதும், அண்ணா, இளைஞர்களான என்னையும், எஸ்டி சோமசுந்தரத்தையும் வேட்பாளராக நிறுத்தினார்., அதிமுக 1967-ல் ஆட்சியை பிடிக்க காரணமே, அவர் அதிக அளவில் இளைஞர்களை வேட்பாளராக நிறுத்தியதுதான்.. அதை எடப்பாடி பழனிசாமியும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் கூறியிருந்தார்.

விண்ணப்ப படிவம்
இதையடுத்துதான், கட்சியில் புதிதாக அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகம்.. அதிமுகவில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நாளைய தினம் தொடங்குகிறது. இதற்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை நாளை முதல் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஒரு படிவத்தின் விலை ரூ.10. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்ரஸ் எங்கே
ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. அதிமுகவில், புதிய உறுப்பினர்களையும் பெருமளவில் சேர்க்க முடிவு செய்துள்ளார்களாம்.. அதுமட்டுமல்ல, அந்த விண்ணப்பத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, படிப்பு, வேலை, முகவரி உள்ளிட்ட எல்லா விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் கூடுதல் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.

பூசல் குழப்பம்
இதையொட்டி மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் செயற்குழு கூட்டத்தின்போது எவ்வளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று டார்கெட் நிர்ணயிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.. தற்சமயம் பாஜகவுடனான பூசலும் குழப்பமும் சர்ச்சையும் தொடர்ந்து வருவதால், கூட்டணி விவகாரத்திலும் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. திமுகவிலும் 2 கோடி என இலக்கை நிர்ணயித்து உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ள நிலையில், அதிமுகவிலும் உறுப்பினர் சேர்க்கை ஆரம்பமாகி உள்ளது, களத்தை பரபரப்பாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications