ஒரே போன் கால்.. விறுவிறுன்னு வேலை.. குவிந்த நிவாரண பொருட்கள்.. ஆச்சர்யப்படுத்திய அமைச்சர் உதயநிதி!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் போனில் சொன்னதுமே, நிவாரண பணிகள் உடனடியாக விரைந்து நடைபெற்றதாக மனித உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தத்தளித்தன. தமிழக அரசு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. மழை வெள்ளத்தால் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் ஏராளமானோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்நிலையில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் அரசுவை போனில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்புகளையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அதைத்தொடர்ந்து, சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "வணக்கம். கடந்த 8ஆம் தேதி, விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளின் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றி விரிவாக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்டறிந்தார்.
உடனடியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகக் கூறினேன். இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு அலுவலர் உடனே நியமிக்க வேண்டும் என்றேன். அன்று மாலையே அதற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். மருத்துவ முகாம்கள் வீடு தேடி செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன். 10ஆம் தேதி முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அதேபோல 6000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவரின் கட்சி சார்பாக வழங்கவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு சிறப்பு முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தன் அடிப்படையில் அதை தொடங்க உள்ளார்கள் என்பதையும் அறிந்தேன்.

இந்த எளியோன் வைத்த வேண்டுகோள்களை உடனடியாக செயல்படுத்திக் கொண்டும் மற்றும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதி மக்கள் சார்பாகவும் சமூக அமைப்புகளின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications