"சாதிய" வன்மம்! அரியலூர் கலெக்டர் மீது குவிந்த புகார்! தலைமை செயலகத்திற்கு பறந்த முக்கிய உத்தரவு
சென்னை: சாதிய வன்மத்துடன் அரியலூர் கலெக்டர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் ரமண சரஸ்வதி. இவர் குறித்து சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் செய்தி ஒன்று வெளியாகிப் பரபரப்பை கிளப்பி இருந்தது.
அதில் பட்டியல் வகுப்பு அலுவலர்களிடம் ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகவும், அவர்களைக் கேளி செய்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

ஆட்சியர்
அந்த கட்டுரையில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை உருவக் கேளி செய்வது, பதவிக்குத் தகுதியில்லாதவர்கள் என்று தரம் தாழ்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். மேலும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களைத் தகுதி நீக்கம் செய்வது எல்லாருக்கும் முன் அவமானப்படுத்தும் நோக்கத்தில் நடந்து கொள்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாக ஊழியர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

புகார்
இவரது அந்த சாதிய வன்ம நடவடிக்கையால், பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்ட வட்டாட்சியர், தற்கொலைக்கு முயன்றதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும், வட்டார வளர்ச்சி அலுவலரை அனைவர் முன் அடிக்க கை ஓங்கியது, பைல் ஒன்றை அனைவர் முன்னிலையும் தூக்கி எரிவது போன்ற செயல்களிலும் இவர் ஈடுபட்டதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

அமரவிடவில்லை
ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் அங்குள்ள பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவரது உதவியாளர் பிரபாகரும் தாழ்த்தப்பட்ட அதிகாரிகள் கேளி கிண்டல் செய்து வருவதாகக் கூறப்பட்டு உள்ளது. மேலும், ஒரு சமயம் மாவட்ட வருவாய்த்துறை (தனி) அதிகாரியைச் சாதிய வன்மத்துடன் ஒருமையில் பேசி, அவரது சீட்டில் கூட அமர விடாத நிகழ்வும் நடந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தயக்கம்
அதிகாரிகளை மட்டுமின்றி, போலீசாரையும் அவர் முறையாக நடத்துவதில்லை என்ற புகார் உள்ளது. இந்த மோசமான போக்கு காரணமாக 3 டிஆர்ஓக்கள் பணி நியமனம் செய்தும் கூட பதவியேற்கத் தயங்கி வருவதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளதாக அந்த நாளிதழில் செய்து வெளியாகி இருந்தது.

உத்தரவு
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.












Click it and Unblock the Notifications