வசதியான மனைவி.. சொத்து, வருமானம் மனைவிக்கு அதிகமிருந்தால் ஜீவனாம்சம் தர தேவையில்லை: சென்னை ஹைகோர்ட்
சென்னை: விவாகரத்து பெற்ற கணவருக்கு வேலை இல்லாவிட்டாலும், நீதிமன்ற உத்தரவின்படி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டியது, அவரது கடமை என்று சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது நிலையில், மனைவிக்கு அதிக வருமானம் இருந்தால், அந்த வசதியான மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மனைவிக்கு அதிக சொத்துக்கள், வருமானம் இருந்தால், ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை' என தெரிவித்த, சென்னை உயர் நீதிமன்றம், ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட, குடும்பநல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் தம்பதி
உத்தரபிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த தம்பதியினர், கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்த மனைவி, 2016ல் தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.. இவர்களுக்கு லக்னோ குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
அந்த உத்தரவில், விவாகரத்து பெற்ற கணவர், தன் மனைவிக்கு ஜீவனாம்சமாக மாதம் 2,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, அலகாபாத் ஹைகோர்ட்டில் கணவர் அப்பீல் செய்தார்.
கட்டாயம் ஜீவனாம்சம்
அந்த மனுவில், "தன்னுடைய மனைவி ஆசிரியர் பணி செய்து, மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று கோரினார்.
இதையடுத்து நீதிபதி தன்னுடைய உத்தரவில் சொல்லும்போது, "மனுதாரரின் மனைவி மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தவறிவிட்டார். மேலும், அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது. அவர் கூலி வேலை செய்தாலும் நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். அப்படியிருக்க, மாதம் 2,000 ரூபாய் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டியது மனுதாரரின் கடமை. அதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க முடியாது" என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
விவாகரத்து பெற்ற கணவருக்கு வேலை இல்லாவிட்டாலும், நீதிமன்ற உத்தரவின்படி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டியது, அவரது கடமை என்று அலகாபாத் ஹைகோர்ட் வழங்கிய இந்த உத்தரவானது, பலரது கவனத்தையும் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.
வசதியான மனைவிக்கு ஜீவனாம்சம்?
இந்நிலையில், மனைவிக்கு வருமானம் அதிகம் இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்க தேவையில்லை என்று விவாகரத்து வழக்கு ஒன்றில் சென்னை நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.
சென்னையை சேர்ந்த அந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்... ஆனால், இந்த தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி, இருவருக்குள்ளும் தகராறு வெடித்தது.. ஒருகட்டத்தில், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாரத்து வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை குடும்ப நல நீதிமன்றம், டாக்டர் தன்னுடைய மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி பிறப்பித்த உத்தரவு இதுதான்:
மனைவியின் அதிக வருமானம்
"மனுதாரர், தன் மனைவிக்கு, மாதம் 30,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என, குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரரின் மகன் 'நீட்' தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறார்
அவரது படிப்புக்கான செலவாக, 2.77 லட்சம் ரூபாயை தர, மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம், அவரது மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது. அவர் 'ஸ்கேன் சென்டர்' நடத்தி வருகிறார் வருகிறார் என்று மனுதாரர் தரப்பில் வாதிட்டு அது தொடர்பான சான்றுகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை. அதே நேரத்தில் மகனுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற உத்தரவில், இந்த நீதிமன்றம் தலையிடவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications