‛மாப்பிள்ளை நான் பாஜககாரன்’.. சாதியை குறிப்பிட்டு திருச்சி சூர்யா போட்ட பதிவு.. ஆர்கே சுரேஷ் பதிலடி
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேற்றப்பட்ட திருச்சி சூர்யா தொடர்ந்து பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் பாஜகவால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து ஆலோசனை நடத்தப்படும் என திருச்சி சூர்யா கூறியதற்கு நடிகரும், பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளருமான ஆர்கே சுரேஷ் மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா செயல்பட்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார்.

இந்நிலையில் தான் கடந்த 20ம் தேதி திருச்சி சிவாவின் அனைத்து பொறுப்புகளும் திடீரென்று பறிக்கப்பட்டன. இதனால் திருச்சி சிவா அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், மாஜி ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனை, திருச்சி சூர்யா யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தார். அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திருச்சி சூர்யா, அண்ணாமலைக்கு ஆதரவாகவும், தமிழிசைக்கு எதிராகவும் பேசினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து திருச்சி சூர்யா, ‛‛ அண்ணன் அண்ணணாமலையால் ஈர்க்கப்பட்டு தான் நான் தமிழ்நாடு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு பதிலளித்தேன். அதற்காக நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் என்பது எனக்கு இல்லை'' எனக்கூறி வெளியேறினார்.
இந்நிலையில் தான் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள திருச்சி சிவா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு போட்டோ வெளியிட்டு இருந்தார். அதில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முக்குலத்தோர் சமூக முக்கிய பிரமுகர்கள் எனக்கூறி பல நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். அதில் நடிகரும், பாஜக ஓபிசிபி அணி மாநில செயலாளருமான ஆர்கே சுரேஷின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
அதோடு இந்த பதிவில், ‛‛முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மாவட்ட, மண்டல், ஒன்றியத்தில் உள்ளடக்கிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். பிஜேபியால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைத்து மாபெரும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்... விரைவில்...'' என கூறியிருந்தார்.
இந்த பதிவை பார்த்த ஆர்கே சுரேஷ், திருச்சி சூர்யாவுக்கு பதிலடி கொடுத்தார். அதாவது ,‛‛நான் தமிழக பாஜகவில் தான் தொடர்ந்து பயணிக்கிறேன் என்பதை மாப்பிள்ளை திருச்சி சூர்யாவுக்கு கூறிக்கொள்கிறேன். பாரத பிரதமர் நரேந்திர மோடி மீது நான் கொண்டுள்ள மரியாதையினாலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக தொண்டர்கள் அனைவரும் னெ்மேல் கொண்ட அன்பினாலும் தொடர்ந்து பயணிப்பேன்'' எனக்கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications