Exclusive: உங்களுக்காக வாதாட நான் இருக்கேன்! தமிழ்நாட்டு பெண்களுக்கு புது நம்பிக்கையூட்டும் குஷ்பு!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்பது எனக்கு கிடைத்த நல்ல பிளாட்ஃபார்ம் என குஷ்பு பெருமிதம்.
சென்னை: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு டெல்லியில் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொள்கிறார்.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்ற அவர் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றையும் தனது பயணத்தின் போதே அளித்திருக்கிறார்.

பெண்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் தாம் துணையாக நிற்பேன் என்பதை இதில் கூறியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;
கேள்வி: தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
பதில்: நான் ஏற்கனவே பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அது உங்களுக்கும் உங்களை போன்ற ஊடகத்தினருக்கும் தெரியும். பெண்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் நான் எந்தளவுக்கு பேச வேண்டுமோ அந்தளவுக்கு பேசி வருகிறேன். இதற்கு எழும் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களை கண்டு ஒரு நாளும் நான் அஞ்சியதில்லை. இந்தச் சூழலில் எனக்கு ஒரு நல்ல பிளாட்ஃபார்ம் கிடைத்துள்ளது. இதனால் இதை வைத்து முன்பைக் காட்டிலும் இன்னும் கூடுதல் துணிச்சலுடன் பெண்களுக்காக என்னால் குரலை உயர்த்தி பேசவும் முடியும், போராடவும் முடியும்.
கேள்வி: எல்லாம் சரிங்க, மகளிர் ஆணையம் என்று ஒரு அமைப்பு இருப்பதே பலருக்கும் தெரியாத நிலை இருக்கிறதே?
பதில்: தேசிய மகளிர் ஆணையத் தலைவியிடம் கலந்து பேசி நிச்சயமாக இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிகை எடுப்பேன். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலை தான் இன்று இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் சொல்லிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். அரசாங்கம் சார்பில் மகளிர் ஆணையம் என்று ஒரு அமைப்பு இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. குடும்ப வன்முறை நிகழ்வுகளை கூட தாராளமாக எங்களிடம் தெரிவிக்கலாம். பெண்கள் ஈசியாக மகளிர் ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம், கடிதம் எழுதலாம், உறுப்பினர்களை சந்தித்து பேசலாம், மெயில் அனுப்பலாம் என்பதை ஒன் இந்தியா தமிழ் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: அப்ப இனிமேல் உங்களை பெண்கள் சந்திக்க வரலாமா, வந்தால் சந்திப்பீர்களா?
பதில்: உறுதியாக, இதிலென்ன சந்தேகம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பது தான் எனது முதல் பணியாக இருக்கும். இதனிடையே இனி அதிகநாட்கள் நான் டெல்லியில் தான் இருக்க வேண்டியது வரும். அதனால் ஒரு போன் காலில் கூட பாதிக்கப்பட்ட பெண்கள் என்னை தொடர்பு கொண்டு பேசலாம். குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் நிச்சயம் உங்களுக்காக பேசுவதற்கு, வாதாடுவதற்கு நான் இருக்கிறேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.
கேள்வி: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில் ஆய்வு, சுற்றுப்பயணம் எல்லாம் செய்வீர்களா?
பதில்: நிச்சயமாக, இன்று தான் நான் பொறுப்பேற்கிறேன். தேசிய மகளிர் ஆணையத் தலைவியிடம் ஆலோசனை செய்த பிறகு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆய்வு நடத்தவும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் உங்கள் வாயிலாக சொல்லிக் கொள்கிறேன், முதலில் பெண்கள் புகார் கொடுக்க வெளியே வரணும், போராட துணியனும். பக்கபலமாக நிற்க நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு ஒன் இந்தியா தமிழுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications